ஈர்க்கும் காதல் தருணங்கள்!
திகட்டத் திகட்டக் காதலைக் காட்டும் திரைப்படங்கள் என்பதே தற்போது அபூர்வமாகி விட்டது. தமிழ் என்றில்லை, பல மொழிகளிலும் அதுதான் நிலைமை. அப்படியொரு சூழலில் அத்திபூத்தாற்போல வெளியாகும் சில காதல் திரைப்படங்கள் நல்ல திரைமொழியைக் கொண்டிருப்பது உடனடியாக ரசிகர்களின் கவனத்தைக் கவரும். அந்த வகையில் சிறப்பானதொரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது ஹரிஹரன் ராம் இயக்கிய ‘ஜோ’ படத்தின் ட்ரெய்லர்.
அதனைப் பூர்த்தி செய்யும் விதமான காட்சியனுபவம் படத்தில் காணக் கிடைக்கிறதா?
காதல் பூக்கும் தருணம்!
ராமேஸ்வரத்தில் துறுதுறுப்பும் குதூகலமுமாகத் திரியும் பள்ளி மாணவராகத் திகழ்கிறார் ஜோ (ரியோராஜ்). ஒருமுறை நண்பர்கள் புடைசூழ, இன்னொரு பள்ளியில் நடைபெறும் கலைவிழாவுக்குச் செல்கிறார். பள்ளி வளாகத்தில் நுழையும்போதே, ஒரு மாணவனோடு மோதல் ஏற்படுகிறது.
கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முகத்தில் வண்ணம் பூசிக் கொள்கிறார் ஜோ. அதன்பிறகு, நண்பனைத் தேடி வெளியே செல்கிறார் ஜோ. அந்த நண்பன் வந்துவிடுகிறார். ஆனால், ஜோவைக் காணவில்லை. அதையடுத்து, அவரைத் தேடி வெளியே வருகின்றனர் நண்பர்கள். ஒரு வகுப்பறையின் வெளியே அதே மாணவனை ஜோ தாக்குவதைக் காண்கின்றனர். அவரை இழுத்துக்கொண்டு, அந்த பள்ளியில் இருந்து வெளியேறுகின்றனர்.
சில மாதங்கள் கழித்து, தனது பள்ளி நண்பர்கள் சகிதம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கிறார் ஜோ. அங்கு சுசித்ரா (மாளவிகா மனோஜ்) என்ற பெண்ணைப் பார்க்கிறார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே வகுப்புதான். அந்த முதல் பார்வையிலேயே, ஜோ மனதில் காதல் தீ பற்றுகிறது.
பிறகு மெதுவாக சுசித்ரா உடன் அறிமுகமாகி, பழகுகிறார் ஜோ. ஒருகட்டத்தில் அது காதலாக மலர்கிறது. கல்லூரிக் காலம் முழுவதும் அது பிரிக்க முடியாத பந்தமாக இருக்கிறது. ஆனால், கல்லூரி முடிந்ததும் முதுகலைப் படிப்புக்காக இருவரும் வெவ்வேறு கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். அது அவர்களுக்கிடையே மனரீதியான பிரிவை உண்டாக்குகிறது.
ஒருகட்டத்தில், ’எனது வீட்டுக்கு வந்து பெண் கேள்’ என்று ஜோவிடம் சொல்கிறார் சுசித்ரா. அவரும் அவ்வாறே செய்கிறார். ஆனால், சுசித்ராவின் உறவினர்கள் தகராறில் அவருடன் ஈடுபடுவதால் அங்கு கைகலப்பு ஏற்படுகிறது. அதில், சுசித்ராவின் தந்தை கீழே விழுந்து விடுகிறார்.
அந்த காட்சியைக் காணும் சுசித்ரா, ‘தந்தையைத் தள்ளியது ஜோ’ என்று நினைக்கிறார். அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். அந்தப் பிரிவினை ஜோவால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த நிலையில், சுசித்ராவுக்குத் திருமணம் என்ற தகவல் கிடைக்கிறது. அவரை நேரில் காணச் செல்கிறார் ஜோ.
அங்கு, சுசித்ரா மரணித்துக் கிடப்பதைக் காண்கிறார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல், ஜோவை நிலைகுலையச் செய்கிறது. அதுவரை பொழுதுபோக்குக்காக மது அருந்தியவர், அதன்பிறகு அதிலேயே மூழ்கத் தொடங்குகிறார். ஒருமுறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். நண்பர்களும் பெற்றோர்களும் அவரைக் காப்பாற்றுகின்றனர்.
ஜோவை அந்த துயரத்தில் இருந்து மீட்டெடுக்க, அவருக்குத் திருமணம் செய்வதுதான் ஒரே வழி என்று நினைக்கின்றனர் பெற்றோர். அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.
திருமணத்திற்கு முந்தையநாள், ஜோவுக்கு போன் செய்கிறார் மணப்பெண் ஸ்ருதி (பவ்யா த்ரிகா). ‘எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை; கல்யாணத்தை நிறுத்திடுங்க’ என்கிறார். ஆனால், மது போதையில் இருக்கும் ஜோவின் நண்பரே அதனைக் கேட்கிறார். அவரால், அதனை ஜோவிடம் சொல்ல முடிவதில்லை.
அடுத்த நாள் காலையில், திருமண மேடையில் ஸ்ருதிக்கு தாலி கட்டுகிறார் ஜோ. அப்போது, ஸ்ருதி அவரை முறைத்துப் பார்க்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? இரு வேறு துருவங்களாக இருக்கும் இவர்கள் மண வாழ்வில் ஒன்றுசேர்ந்தார்களா? திருமணத்தை நிறுத்துமாறு ஸ்ருதி வற்புறுத்தியது ஏன் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ஜோ’வின் இரண்டாம் பாதி.
கண்கவர் ஒளிப்பதிவு!
பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக, இருபத்தைந்தைத் தாண்டிய இளைஞனாக, இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காதல் பிரிவால் உருகும் மனிதராகத் திரையில் தோன்றியிருக்கிறார் நாயகன் ரியோராஜ். சோகக் காட்சிகளில் அவரது நடிப்பு, பழைய ரஜினி படங்களை நினைவூட்டுகிறது. அதேநேரத்தில் நண்பர்களுடனான கலாட்டா, நாயகியுடனான காதல் காட்சிகளில் நம்மை எளிதாக ஈர்க்கிறார்.
சுசித்ராவாக வரும் மாளவிகா மனோஜ், வசீகரிக்கும் அழகு முகமாகத் திரையில் தெரிகிறார். அவரது ‘எக்ஸ்பிரெஸிவ்’ கண்கள் காதலை மட்டுமல்லாமல் கோபத்தையும் வருத்தத்தையும் கூட ‘சூப்பராக’ வெளிப்படுத்துகின்றன. ஒரு சாயலில் அனுபமா பரமேஸ்வரனை நினைவூட்டுவது, 2கே கிட்ஸ் அவரைக் கொண்டாட வழி வகுக்கிறது.
இன்னொரு நாயகியாக வரும் பவ்யா த்ரிகா, ‘கொஞ்சம் ஓவர் ஆக்டிங்’ தோரணையை வெளிப்படுத்துகிறார். போகப் போக, அந்த எண்ணம் மழுங்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகம் பொலிவாக இருப்பதில் பவ்யா இன்னும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
ரியோவின் நண்பர்களாக வருபவர்களில் அன்புதாசன் மட்டுமே ‘கோலமாவு கோகிலா’ வழியாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவரும் உடன் வரும் மற்ற நடிகர்களும் திறன்மிகு நடிப்பைத் திரையில் தந்துள்ளனர். அவர்கள் பேச்சில் நிறைந்திருக்கும் ‘லைவ்லினெஸ்’தான் இப்படத்தின் பலம்.
’உங்களை பத்தி நான் விசாரிச்சிருக்கணும்’ என்று ரியோவிடம் சொல்லும் காட்சியில் பவ்யாவின் தந்தையாக வரும் எம்.ஜெ.ஸ்ரீராம் நம் மனதைத் தொடுகிறார். ரியோவின் தாயாக நடித்துள்ள பிரவீனாவுக்குத் தந்துள்ள முக்கியத்துவம், தந்தையாக நடித்த இளங்கோ குமணனுக்குத் தரப்படவில்லை.
இவர்கள் தவிர்த்து ஜெயகுமார், சார்லி உள்ளிட்டோர் மிகச்சில காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர். உடற்கல்வி ஆசிரியராக நடித்தவர் பின்பாதியில் ஆங்காங்கே நம்மை நகைக்க வைக்கிறார்.
சித்துகுமாரின் பின்னணி இசை காட்சிகளோடு நம்மைப் பிணைக்கிறது. பாடல்கள் முதன்முதலாகக் கேட்கையில் ஈர்க்கும் வாய்ப்பு குறைவு. ஆனால் ‘கோவை குளிரா’, ‘உருகி உருகிப் போனதடி’, ‘கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு’ பாடல்கள் அடுத்தடுத்த முறை ‘ரிப்பீட்’ மோடில் கேட்கும் ரகம்.
அதேநேரத்தில், யுவன்சங்கர் ராஜா குரலில் ஒலிக்கும் ‘ஒரே கனா கண்டேன்’ பாடல் முதல் முறை கேட்டவுடனே நம் நெஞ்சுக்குள் ஊடுருவி விடுகிறது. ’கல்லூரி கலைவிழா ஆட்டப்பாடல்’ ஆக ஒலிக்கும் இசைக்கோர்வையும் நம்மை ஈர்க்கிறது.
வருண் கேஜியின் படத்தொகுப்பு, அவசரமின்மையை வெளிப்படுத்தாமல் வெகுநிதானமாக ஷாட்களை கோர்த்திருக்கிறது. அதுவே, படத்திற்கு ஒரு ‘கிளாசிக்’ தன்மையை போர்த்துகிறது.
ஏபிஆரின் கலை இயக்கமும் பள்ளி, கல்லூரி காலத்து வாழ்வைக் காட்டும்விதமாகவும், அந்நினைவுகளை மீட்டெடுக்கும்விதமாகவும் அமைந்துள்ளது.
இந்த படத்தின் ஆகச்சிறப்பானதாக ராகுல் கேஜி விக்னேஷின் ஒளிப்பதிவைக் குறிப்பிடலாம். கேரளாவின் பசுமைப்பகுதிகளை மட்டுமல்லாமல், ராமேஸ்வரத்தில் வெயிலையும் கண்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். அந்த அழகே திரைக்கதை மெதுவாக நகர்வது குறித்த எண்ண அலைகளை மட்டுப்படுத்துகிறது.
ஒருமுறை பார்க்கலாம்!
இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட நுட்பங்கள் மிகச்சிறப்பாக அமைந்து, திரையில் தெரியும் நடிப்புக்கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பைத் தந்துவிட்டாலே போதும்; ஒரு அருமையான ‘ரொமான்ஸ்’ திரைப்படம் நமக்குக் கிடைத்துவிடும்.
அதனை மீறி, அப்படத்தை ‘கிளாசிக்’ ஆக்குவதற்குச் சில மெனக்கெடல்கள் வேண்டும். திரைக்கதையை நேர்த்திமிக்கதாக ஆக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அது ‘க்ளிஷே’வாக தோன்றும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம்; அதனால்கூட, அந்த ‘பெர்பெக்ஷனை’ அவர் தவிர்த்திருக்கக் கூடும். இப்படத்தில் ‘பிரேமம்’, ‘ஆட்டோகிராப்’ போன்ற சில முத்திரைப் படங்களின் தாக்கம் காணக் கிடைக்கிறது.
எங்கோ பயணித்து எங்கோ செல்லும் இந்த திரைக்கதை எப்படி முடிவடையப் போகிறது என்ற நம் கேள்விக்கு, கிளைமேக்ஸில் முத்தாய்ப்பாக ஒரு திருப்பத்தைத் தந்து திருப்தியுடன் நம்மை வழியனுப்பி வைக்கிறார் இயக்குனர். அது திடீரென வந்த திருப்பமாக இல்லை; அதேநேரத்தில், அப்படியொரு திருப்பம் வரப்போகிறது என்பதை நமக்கு முன்கூட்டியே உணர்த்தவும் இல்லை. அதனாலேயே, அது சட்டென்று நம்மைப் பற்றிக் கொள்கிறது.
‘ஒரு ரொமான்ஸ் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்பவர்கள், ‘கண்ட படங்களை பார்ப்பதற்கு ஒரு காதல் படத்தைப் பார்ப்போமே’ என்ற எண்ணத்தோடு வரும் காதல் ஜோடிகள் ஒருமுறை இதனைக் காணலாம். மிக முக்கியமாக, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் தற்கொலை ஒரு தீர்வாக அமையாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன காரணத்துக்காக இதனைக் கொண்டாடலாம். அந்த வகையில், ‘ஜோ’ நம்மைத் திருப்திப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
உத்தரகாண்ட்: 41 தொழிலாளர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்!