பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி இன்று (மே 30) ஆலோசனை நடத்தினார். Rift in pmk anbumani challenge ramadoss
இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “கட்சியில் சில குழப்பங்கள் நிலவி வருகிறது. இதெல்லாம் தற்காலிகமான குழப்பங்கள் தான். அனைத்தையுமே விரைவில் சரிப்படுத்தி விடுவேன்.
இன்று காலையில் பொருளாளர் திலகபாமா மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் திலகபாமா பொருளாளராக தொடர்கிறார் என்று நான் கடிதம் அனுப்பிவிட்டேன்.
ஏனென்றால் அவரை கட்சியில் இருந்து நீக்க, யாருக்கும் அதிகாரம் கிடையாது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. என் கடிதம் தான் செல்லும். இங்குள்ள மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். யார் மாற்றப்பட்டாலும், அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள் தான் கட்சியில் தொடர்வீர்கள் என்று கடிதம் வரும்.

நான் உள்பட அனைவரும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் தான் எங்களை நியமனம் செய்ய முடியும், கட்சியில் இருந்து நீக்க முடியும். இதுதான் நமது கட்சியின் விதிகள். இது தேர்தல் ஆணையத்தில் உள்ளது.
நான் எவ்வளவோ பதவிகள், பொறுப்புகளை பார்த்துவிட்டேன். உங்களை போன்ற அடிமட்ட தொண்டன் தான் நான். உங்களுடன் தலைமை தொண்டனாக இருக்கிறேன். மனதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. மீடியா நண்பர்கள் இருப்பதால் பேச முடியவில்லை.
நான் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து எனக்கு மன உளைச்சல் தான். நேற்று தான் விடுதலை கிடைத்தது. இனிமேல் நாம் வேகமாக செல்லலாம். எந்த தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம்.
அதேவேளையில் நமது கட்சியை தொடங்கிய சமூகநீதிக்காவலர் ராமதாஸின் கொள்கைகள், கோட்பாடுகளை நாம் கடைபிடிப்போம். பாமகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு வருவோம். வருகின்ற தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அடுத்த கட்டம் நம்முடைய ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும்.
என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும் அவதூறுகளையும் சந்தித்திருக்கிறேன். இவை அனைத்தும் என்னை மேலும் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால், உலகத்தில் நான் மிகவும் நேசிப்பது எனது அம்மா தான். அதேபோல, எனது அம்மா இந்த உலகத்தில் மிகவும் நேசிக்கும் நபர் நான் தான். எனது அம்மா மீது சிறு துரும்பு கூட பட விடமாட்டேன். ஆனால், என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இதுவும் கடந்து போகும்.
இங்குள்ள குழுவால் தான் பாமக மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இந்த டீமை வைத்துக்கொண்டு நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். இந்த டீமை கெடுப்பதற்கு சில சூழ்ச்சிகள் நடக்கிறது. அதை உறுதியாக நாங்கள் எதிர்ப்போம்.
கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு என்னிடம் பல செயல்திட்டங்கள் இருக்கிறது. இப்போது அதை செயல்படுத்துவதற்கு சுதந்திரமும் இருக்கிறது” என்று அன்புமணி தெரிவித்தார். Rift in pmk anbumani challenge ramadoss
