கராத்தே Vs நயினார்… அரசு விழாவால் ஏற்பட்ட உரசல்!

Published On:

| By Selvam

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்ற அரசு விழாவில், மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது குறித்து வாய் திறக்காததற்கு அக்கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. Rift Karate Thiagarajan Nainar

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், கங்கைகொண்டானில் டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இந்த அரசு நிகழ்ச்சியில் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தென் மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது மத்திய அரசு இடைக்கால நிதி கூட தரவில்லை. நயினார் நாகேந்திரனுக்கும் அந்த உண்மை தெரியும். நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு தான் வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள். 34 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், வெறும் 276 கோடி மட்டும் தான் ஒதுக்கினார்கள்.

பட்ஜெட்டிலும் நாம் கேட்ட நிதியை ஒதுக்கவில்லை. திருநெல்வேலி அல்வாவை விட ஒன்றிய அரசு தருகின்ற அல்வா தான் ஃபேமஸாக இருக்கிறது” என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன், மத்திய அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.

இந்தநிலையில், பிப்ரவரி 13-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனை கண்டித்து பேசினார்.

கராத்தே தியாகராஜன் பேசும்போது, “நமது மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்கள் மத்தியில் பாஜகவை கொண்டு சென்றிருக்கிறார்.

திருநெல்வேலி நிகழ்ச்சியில் நமது பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் தரக்குறைவாக பேசுகிறார். நயினார் நாகேந்திரன் அந்த கூட்டத்தில் இருக்கும்போதே முதல்வர் இப்படி பேசுகிறார். அப்போதே அவர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். அரசியல் நாகரீகம் கருதி அவர் வெளிநடப்பு செய்யவில்லை என்றால், கூட்டம் முடிந்த பிறகு அறிக்கை வாயிலாகவோ அல்லது சமூக வலைதளங்களிலோ தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கலாம். ஆனால், இதுவரை நயினார் நாகேந்திரன் முதல்வரை கண்டிக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

நயினார் நாகேந்திரன் குறித்து பொதுமேடையில் வெளிப்படையாக கராத்தே தியாகராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் அக்கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், தூத்துக்குடியில் நேற்று (பிப்ரவரி 14) செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் கராத்தே தியாராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “இதைப்பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. சபை நாகரீகம் என்று ஒன்று இருக்கிறது” என பதிலளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசையும் பிரதமர் மற்றும் நிதியமைச்சரை விமர்சித்ததை பற்றி தனக்கு எந்த கருத்தும் கிடையாது என நயினார் நாகேந்திரன் சொல்லியிருப்பது இந்த சர்ச்சையை மேலும் அதிகமாக்கியுள்ளது.

ஏற்கனவே, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு ரகசியமாக நயினார் நாகேந்திரனை சந்தித்து பேச்சு நடத்தியதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share