உதயசங்கரன் பாடகலிங்கம்
தியேட்டரில் காண வேண்டிய படம்!
ஆண்டிறுதியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதென்பது ஒரு சுவையான அனுபவம். அதுவரை நாம் பார்த்த சிறப்பான திரையனுபவங்களின் தொகுப்பாகச் சில படங்கள் அமையும்.
சில வேளைகளில் ஆண்டு முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இயலாமல் முடங்கி இருந்து, திடீரென்று புது வேகம் பெற்று ரசிகர்களைச் சென்றடைவதும் நிகழும்.
ஒரு படத்தின் பட்ஜெட்டை மனதில் கொண்டோ, அதில் இடம்பெற்ற குழுவினரைப் பொறுத்தோ, எந்த வகைப்பட்ட படைப்பு அது என்று தீர்மானிக்க முடியாது.
கிட்டத்தட்ட அப்படியொரு நிலையிலேயே மலையாளப் படமான ‘ரைபிள் கிளப்’ வெளியாகியிருக்கிறது. வெஸ்டர்ன், ட்ராமா, ஆக்ஷன் வகைமைகளைக் கலந்து கட்டியதாக இப்படம் இருக்கக்கூடும் என்று முன்னுரைத்தது ட்ரெய்லர்.

ஆஷிக் அபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜயராகவன், வாணி விஸ்வநாத், சுரேஷ் கிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்களோடு திலேஷ் போத்தன், சுரபி லட்சுமி, தர்ஷனா ராஜேந்திரன், உன்னிமாயா பிரசாத், ஹனுமான்கைண்ட், வினீத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இதில் வில்லனாக நடித்துள்ளார்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது ‘ரைபிள் கிளப்’?
இரண்டு துருவங்கள்!
’ரைபிள் கிளப்’ கதை 1991-ஆம் ஆண்டில் நிகழ்வதாகக் காட்டப்படுகிறது.
மங்களூரைச் சேர்ந்தவர் தயானந்த் பாரே (அனுராக் காஷ்யப்). சர்வதேச அளவில் ஆயுத விற்பனையில் ஈடுபடும் தொழிலதிபர். அவரது இரண்டாவது மகன் ஒரு கொண்டாட்டத்தின்போது படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
அந்த நிலைமைக்குக் காரணம் ஒரு காதல் ஜோடி. அடுத்த நிமிடமே, தயானந்தின் அடியாட்கள் அந்த காதல் ஜோடியைத் துரத்தத் தொடங்குகின்றனர். தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அந்த ஜோடி சினிமா நட்சத்திரமான ஷாஜகானைத் (வினீத் குமார்) தேடிச் செல்கிறது.
அந்த நேரத்தில், ஷாஜகான் கன்னூர் காட்டுப்பகுதியில் இருக்கும் ஒரு ரைபிள் கிளப்புக்கு செல்கிறார். ஒரு ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்காக, துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறுவதே அவரது திட்டம்.
அந்த ரைபிள் கிளப்பை நிறுவியவர்களில் ஒருவரான லோனப்பன் (விஜயராகவன்), அவரது மகன் காட்ஜோ (விஷ்ணு அகஸ்தியா), மருமகள் குஞ்சுமோள் (தர்ஷனா), மகள் சிசிலி (உன்னிமாயா), மருமகன் ஆவரன் (திலேஷ் போத்தன்) மற்றும் கிளப் உறுப்பினர்களான சூசன் (சுரபி), டாக்டர் லாசர் (சுரேஷ் கிருஷ்ணா), அவரது மனைவி இட்டியானம் (வாணி விஸ்வநாத்) உட்படப் பலர் அங்கிருக்கின்றனர்.

ஷாஜகான் மற்றும் அவரோடு வந்தவர்களுக்கு ரைபிள் கிளப்பில் விருந்து அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஷாஜகானைத் தேடி அந்த காதல் ஜோடியும் அங்கு வருகிறது. அவர்களையும் வரவேற்று தங்கச் செய்கின்றனர் லோனப்பன் குடும்பத்தினர்.
அன்று பௌர்ணமி ஆதலால், ஆவரன் குழுவினர் வேட்டைக்குச் செல்கின்றனர். காதல் ஜோடியால் வரும் ஆபத்தை உணர்ந்து, ‘இன்று வேட்டைக்குச் செல்ல வேண்டாம்’ என்கிறார் ஷாஜகான். ஆனால், ஆவரன் பிடிவாதம் காரணமாக அவரும் வேட்டையில் பங்கேற்கிறார்.
ரைபிள் கிளப்பில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் சில ஆண்களே இருக்கின்றனர். அந்த நேரத்தில், காதல் ஜோடியைத் தேடி தயானந்தின் மூத்த மகன் பீரா (ஹனுமான்கைண்ட்) அங்கு வருகிறார்.
தந்தையின் எச்சரிக்கையை மீறி, அங்குள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்ட நினைக்கிறார். அதனை அறிந்ததும், பதறி அடித்துக்கொண்டு அங்கு வருகிறார் தயானந்த்.
அதன்பின் என்னவானது?
கிளப்பில் இருப்பவர்களைத் துவம்சம் செய்யும் முயற்சியில் தயானந்தின் ஆட்கள் இறங்கினார்களா? வேட்டைக்குச் சென்ற ஆவரன் குழுவினர் உடனடியாகத் திரும்பினார்களா என்பது போன்ற கேள்விகளுக்குத் துப்பாக்கி குண்டுகள் முழங்கப் பதிலளித்திருக்கிறது இந்த ‘ரைபிள் கிளப்’.
இந்தக் கதையில் ஆயுத விற்பனையில் ஈடுபடும் ஒரு தொழிலதிபரும் அவரது குடும்பத்தினரும் ஒரு துருவம் என்றால், ஆங்கிலேயர் காலத்து பாரம்பரியத்தை விடாப்பிடியாகப் பின்பற்றிவரும் ரைபிள் கிளப்பை சேர்ந்தவர்கள் இன்னொரு துருவம் என்று கொள்ளலாம்.
இரு துருவங்களும் மோதிக்கொள்ளும்போது திரையில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதைச் சொன்னதில் சண்டைப்பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரின் பங்களிப்பு அதிகம். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
’டமால் டுமீல்’ ஆக்ஷன்!
’ஆக்ஷன்’ படங்கள் என்றாலும், துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு சண்டையிடுவதைக் கண்டால் அயர்ச்சியை உணரும் ரசிகர்களே அதிகம். அதனால், அது போன்ற காட்சிகளை அளவோடு திரையில் காட்டுவதே நம்மவர்களின் வழக்கம்.

அப்படியிருக்க, இந்தப் படமோ அதையே மையமாகக் கொண்டிருக்கிறது.
‘ரைபிள் கிளப்’பின் பின்பாதி முழுக்கவே ‘டமால் டுமீல்’ ஆக்ஷன் நிறைந்திருகிறது. ’அந்த சத்தமே ஆகாது’ என்பவர்களுக்கு இப்படம் சுத்தமாக ஆகாது.
அதேநேரத்தில், ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இப்படம் இருக்குமென்பதை அடித்துச் சொல்லலாம். வெறுமனே ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல், அதனைக் கண்டு ‘கூஸ்பம்ஸ்’ ஆகும் அளவுக்கு கதாபாத்திரங்களின் வார்ப்பும் வசனங்களும் இதில் வலுவாக அமைக்கப்பட்டுள்ளன.
அதற்காகவே எழுத்தாக்கத்தில் ஈடுபட்ட ஷ்யாம் புஷ்கரன், சுஹாஸ், திலேஷ் நாயர் கூட்டணிக்கு ‘சபாஷ்’ சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் கதை மிக மெல்லியது.
சம்பவங்களும் கூடப் புதிதென்று சொல்ல முடியாது. ஆனால், ரைபிள் கிளப்பையும் அதன் உறுப்பினர்களையும் தனித்துவமாகக் காட்டிய வகையில் இப்படம் வித்தியாசமானதொரு திரையனுபவத்தைத் தருகிறது.
சண்டைப்பயிற்சி வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தருடன் இணைந்து ஒரு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார் இயக்குனர் ஆஷிக் அபு. அதனால் கேமிரா கோணங்கள், நகர்வுகளில் தொடங்கி இரு தரப்பினருக்குமான மோதலை 360 டிகிரியில் காட்டுவது வரை அனைத்தையும் தான் விரும்பியது போன்றே உருவாக்கியிருக்கிறார்.
அவரது எண்ணத்திற்கு உருவம் தரும் வகையில், அக்காட்சிகளில் சூழலை வடிவமைத்து தந்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் அஜயன் சலிசேரி.
சாஜனின் படத்தொகுப்பானது ஆக்ஷன் காட்சிகளில் ‘விசில்’ பறக்க வைக்கிறது.
மஷார் ஹம்ஸாவின் ஆடை வடிவமைப்பு, இக்கதை நிகழும் தொண்ணூறுகளை கண் முன்னே காட்ட உதவியிருக்கிறது.
ஒரு பாரம்பரியமான ரைபிள் கிளப் எனும் செட்டப் படம் முழுக்கவே காட்டப்படுவதால், அதுவே அக்காலகட்டத்தில் வெளியான படங்களைப் பார்க்கும் உணர்வு உருவாகிறது. அந்த ‘ரெட்ரோ’ உணர்வைப் புரிந்துகொண்டு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
அந்த உழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டும்விதமாகப் பின்னணி இசை தந்திருக்கிறார் ரெக்ஸ் விஜயன். இன்றைய யுகத்தின் இசை அதில் தெரிந்தாலும், அவற்றின் அடிநாதம் அக்காலகட்டத்தை நினைவூட்டும் வகையிலேயே உள்ளது.
அதுவே, ’இப்படத்தை இன்னொரு முறை காண வேண்டும்’ என்கிற உத்வேகத்தைத் தருகிறது. அவர் தந்திருக்கும் பாடல்களும் ‘ஓகே’ என்று சொல்லும் வகையில் இருக்கின்றன.

இப்படத்தில் பெரும்பட்டாளமே நடித்திருக்கிறது. சுமார் இரண்டு டஜன் பேராவது இதில் முகம் காட்டியிருப்பார்கள். அதுபோக, துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவதாக வந்து போனவர்களின் எண்ணிக்கை இன்னும் சில டஜன் இருக்கும்.
குறிப்பிட்ட இலக்கு நோக்கிப் பாயும் ஏவுகணை போன்று அமைந்திருக்கும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில், தேவையான அளவுக்கு அவர்கள் அனைவரது நடிப்பும் திரையில் வெளிப்பட்டிருக்கிறது.
’பூந்தோட்ட காவல்காரன்’ வாணி விஸ்வநாத், ’இரும்புத்திரை’ தர்ஷனா ராஜேந்திரன், ‘மகாராஜா’ வில்லன் அனுராக் காஷ்யப் என்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகங்கள் சில இப்படத்தில் உண்டு.
அவர்கள் தவிர்த்து திலேஷ் போத்தன், விஜயராகவன், சுரபி லட்சுமி, பிரசாந்த் முரளி, வினீத்குமார், ராஃபி, விஷ்ணு அகஸ்தியா, உன்னிமாயா பிரசாத் உள்ளிட்ட பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
சூரஜ் செருகட் எனும் ராப் பாடகர் ஹனுமான்கைண்ட் இதில் முக்கியப் பாத்திரமொன்றை ஏற்று நடித்திருக்கிறார்.
ஓகேயா? சூப்பரா?
என்னதான் ஆக்ஷன் படம் என்றாலும், இதில் ஆண்களை மையப்படுத்திய காட்சிகளே அதிகம் என்றும் சொல்லிவிட முடியாது. காரணம், இதில் பெண் பாத்திரங்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன.
‘இங்க ஆம்பளைங்க யாரும் இல்லையா’ என்ற வில்லனின் கேள்விக்கு வாணி விஸ்வநாத் பதில் சொல்கிற இடம் அப்படிப்பட்டது. விருந்தினருடன் உணவுண்ணும் காட்சியில் உன்னிமாயா பாத்திரம் வாணியைப் பார்த்தவுடன், அதுவரை அவ்விடத்தில் நிலவிய சிரிப்பொலி மறைந்து வேறொரு விஷயம் பேசப்படும்.

அது போன்ற விஷயங்களே, இக்கதையில் பெண்களுக்கு என்ன பங்கு என்பதைச் சொல்லிவிடும். ’ஆக்ஷன் படங்கள் என்றாலே ஆண் பாத்திரங்களே அதிகமிருக்கும்; பெண் பாத்திரங்கள் சாகடிக்கப்பட்டு ‘சென்டிமெண்ட் ரசம்’ திரையில் பிழியப்படும்’ என்கிற ’க்ளிஷே’க்களை உடைத்தெறிந்திருக்கிறது ‘ரைபிள் கிளப்’. ஹீரோயிச பில்டப் ஷாட்கள் இதில் அதிகம் கிடையாது.
‘ரைபிள் கிளப் படம் ஓகேயா, சூப்பரா’ என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஆனால், அவ்விரண்டையும் தாண்டி இன்னொரு விதமாக இப்படத்தைக் குறிப்பிட முடியாது என்பதுவே நிஜம். காரணம், தியேட்டரில் அமர்ந்திருக்கும்போது ரசிகர்கள் பெற வேண்டிய ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’களை நிறையவே தருகிறது இப்படம். அதனை தியேட்டருக்கு சென்று பெற விரும்புபவர்கள் ‘ரைபிள் கிளப்’ பார்த்து உற்சாகமடையலாம்.
அதேநேரத்தில், ‘ஆக்ஷன் படம்லாம் எதுக்கு எடுக்குறாங்க’ என்று தியேட்டருக்கு சென்று புலம்புபவர்கள், அதற்குப் பதிலாக வீட்டில் அமர்ந்து ஓடிடியில் நல்லதொரு ‘பீல்குட்’ படமொன்றை பார்த்து ரசிக்கலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் – திரிஷாவை விமான நிலையத்தில் போட்டோ எடுத்தது யார்? – மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
பாஜக எம்.பி. மண்டை உடைப்பு… ராகுல் மீது கொலை முயற்சி புகார்: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?