“அதிமுக ஆட்சியில் எப்.ஐ.ஆரை மாற்றி எழுதினர்” : கனிமொழி குற்றச்சாட்டு!

Published On:

| By Kavi

அதிமுக ஆட்சியில் எப்.ஐ.ஆரையே மாற்றி எழுதியிருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக நேற்று (டிசம்பர் 27) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படவில்லை. அதனால் அச்சமில்லாமல் குற்றவாளிகள் குற்றம் செய்கின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது.
அதிமுக ஆட்சியில், இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் சூழலை ஏற்படுத்தினோம்.

இன்றைய நிலை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு போட்டோவை எடுத்து காட்டுகிறார்கள். காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்போட தயங்குகிறார்கள்.

புகார் கொடுக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளிவந்துள்ளன. எப்.ஐ.ஆர் எப்படி வெளிவந்தது. டெக்னிக்கல் கோளாறு என்கிறார்கள். அது உண்மையல்ல.
இனி பெண்கள் இந்த அரசாங்கத்தை நம்பி புகார் கொடுக்கமாட்டார்கள். அரசாங்கம் நடுநிலையோடு செயல்படவில்லை” என்று புகார் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இன்று (டிசம்பர் 28) தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக துணை பொதுச்செயலாளார் கனிமொழி, “ அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அவர் ஒரு குற்றம் செய்துள்ளார். அப்போது எப்.ஐ.ஆரையே மாற்றி போட்டிருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை தந்ததோடு மட்டுமில்லாமல் சங்கிலியையும் அந்த குற்றவாளி பறித்துள்ளார். ஆனால், அதைச் சங்கிலி பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை விதித்திருந்தால், ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அது நடைபெறவில்லை.அப்போது, அவர்கள் கடமையை செய்யத் தவறியதால் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க இன்று காரணமாகிவிட்டது.

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாகப் படிக்க வரக்கூடிய தமிழகத்தில் எல்லா பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்துச் சொல்லும் போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சரும், திமுகவும் பெண்களின் உரிமைக்காகவும் பெண்களின் கல்விக்காகவும், உரிமையை இன்னும் அதிகப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறோம். பெண்கள் மீது அதிக அக்கறை உள்ளது” என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘ என் அப்பா இறந்தப்போ, காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் ‘ – பிரணாப் மகள் ஆதங்கம்!

விஜயகாந்த் குருபூஜை : கேப்டன் ஆலயத்தில் தலைவர்கள் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share