உதயசங்கரன் பாடகலிங்கம்
பால்யத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறதா?
குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது, பெற்றோர்களும் முதியோர்களும் தங்களது குழந்தைப் பருவத்திற்கே சென்று வந்ததாக உணர்வார்கள். அவர்களுடன் உரையாடும்போதோ, அவர்களை உற்றுக்கவனிக்கும்போதோ பால்ய காலத்து நினைவுகளை மீட்டெடுப்பார்கள். அது போன்றதொரு அனுபவத்தைப் பெறுவதற்கு ‘அனிமேஷன்’ படங்களைப் பார்ப்பது ஒரு எளிய வழி.
அந்த வகையில், நம்மைப் பால்யத்திற்கே அழைத்துச் செல்லும் அனிமேஷன் படங்களில் ஒன்று ‘Despicable Me’. இந்தப் படத்தின் நான்காம் பாகம் தற்போது உலகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. Minions பாத்திரங்கள் இடம்பெறுகிற சீரிஸ் என்று சொன்னால், இந்தப் படத்தின் மீது உங்களுக்குத் தானாக ஆர்வம் பொங்கும்.
சரி, Despicable Me 4 எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
வில்லன் – ஹீரோ மோதல்!
க்ரூ தான் படித்த பள்ளியில் நடக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவுக்குச் செல்கிறார். ஏவிஎல் எனப்படும் ஆண்ட்டி வில்லன் லீக்கின் அங்கமாக அவர் இருக்கிறார். அங்கு வரும் தனது பால்ய கால எதிரி மேக்ஸிமை கையும் களவுமாகப் பிடிக்க எண்ணுகிறார்.
அதற்கேற்றாற்போல, அந்த விழாவில் கலந்துகொள்ளும் மேக்ஸிம் க்ரூவை அவமானப்படுத்த முயல்கிறார். அந்த பள்ளியின் முதல்வர் மேக்ஸிமுக்கு பரிசு கொடுக்கிறார்.
அதன்பிறகு உரையாற்றும் மேக்ஸிம், சிறு வயதில் தனக்குக் கரப்பான் பூச்சிகள் மீது இருந்த பிரியத்தைச் சக மாணவர்கள் கிண்டலடித்ததாகக் கூறுகிறார். தற்போது, அதே கரப்பான் பூச்சிகளின் வலிமையை உலகுக்குச் சொல்லும்விதமாகத் தனது உடலையே அவை போன்று மாற்றியிருப்பதாகச் சொல்கிறார். உடைகளைக் களைந்து, தன்னிடம் இருக்கும் ‘அசகாய திறனையும்’ வெளிக்காட்டுகிறார்.
அதனைக் கண்டதும், மேக்ஸிமை தனது ஏவிஎல் படையினரைக் கொண்டு சுற்றி வளைக்கிறார் க்ரூ. அவரைக் கைது செய்கிறார். அப்போது, ’உன்னையும் உன் குடும்பத்தையும் பழிவாங்காமல் விடமாட்டேன்’ என்று சவால் விடுகிறார் மேக்ஸிம்.
மனைவி, மூன்று மகள்கள், புதிதாகப் பிறந்த மகன் என்று மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொண்டு வருகிறார் க்ரூ.
இந்த நிலையில், சிறையில் இருந்து மேக்ஸிம் தப்பித்த தகவல் க்ரூவிடம் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல், க்ரூவின் குடும்பத்தை உருக்குலைக்கப் போவதாக மேக்ஸிம் சொன்ன வீடியோ பதிவும் அவரது கையில் கிடைக்கிறது.
அதனைத் தொடர்ந்து, மேப்ளவர் எனுமிடத்திற்குத் தப்பித்துச் செல்கிறது க்ரூவின் குடும்பம். அங்கு ஏவிஎல்லின் தலைமையகம் உள்ளது.
அங்கு ஆயிரக்கணக்கில் மினியன்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. மேக்ஸிம் பிடியில் இருந்து க்ரூவின் குடும்பத்தைக் காக்கும் பணி, அதிலுள்ள 5 மினியன்களுக்கு கொடுக்கப்படுகிறது.
புதிய சூழல், மனிதர்கள் போன்றவற்றால் க்ரூவும் அவரது குடும்பத்தினரும் ரொம்பவே கஷ்டப்படுகின்றனர். பள்ளியில் சக மாணவர்களோடு இயல்பாகப் பழக முடியாமல் குழந்தைகள் திணறுகின்றனர். கைக்குழந்தையாக இருக்கும் மகன் தன்னிடம் நெருங்கிப் பழகாமல் எரிச்சலூட்டுவதைக் கண்டு அயர்ச்சியுறுகிறார் க்ரூ.
இந்தச் சூழலில், மீண்டும் தான் படித்த பள்ளிக்குச் சென்று திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளாகிறார் க்ரூ. அதன் தொடர்ச்சியாக, மேக்ஸிம் அவர் இருக்குமிடத்தைக் கண்டறிகிறார்.
அதன்பின் என்னவானது என்பதைச் சொல்கிறது ‘Despicable Me 4’ படத்தின் மீதி.
வில்லன் – ஹீரோ மோதல் எனும் அரதப்பழசான விஷயம் என்றபோதும், அதனை அனிமேஷன் படமாகப் பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனி ரகமாக இருக்கும். இந்தப் படம் ‘3டி’ அனுபவத்தை வேறு தருவதால் அந்த உற்சாகம் பன்மடங்காக இருக்கிறது.
மீண்டும் குழந்தைப்பருவத்திற்கு..!
மைக் ஒயிட், கென் டாரியோ இப்படத்திற்கு எழுத்தாக்கம் செய்துள்ளனர்.
ஒரு பேருந்தில் மினியன்களிடம் ஓட்டுநர் கடுப்பைக் காட்டும் காட்சியில், அந்த மினியன்கள் என்ன செய்தன என்பதைச் சொல்லுமிடமே நம்மை வயிறு வலிக்கச் செய்கிறது. அந்த காட்சியை வடிப்பதற்காகக் காட்டிய மெனக்கெடல் படம் முழுக்கத் தொடர்கிறது.
குறிப்பாக, தான் படித்த பள்ளிக்கு க்ரூ திருடச் செல்லும் காட்சியும், அதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் பிரின்சிபால் அவரை விரட்டும் இடமும் நம்மைக் குதூகலத்தில் தள்ளும். அந்தக் காட்சிகளின்போது, நாம் மீண்டும் குழந்தைப்பருவத்திற்கே சென்று வந்த அனுபவத்தை உணர்வது நிச்சயம்.
மைக் – கென் இருவரது பங்களிப்பும் அதனை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறது.
டிஃபனி ஹில்ஹர்ட்ஸ் இப்படத்தினைத் தொகுத்திருக்கிறார். அவரது கனகச்சிதமான ‘வெட்டு’கள், படத்தைத் தொய்வில்லாமல் நகர்த்த உதவியிருக்கிறது.
ஹெய்ட்டர் பெரைராவின் பின்னணி இசையும், ஃபாரல் வில்லியம்ஸின் பாடல்கள் மற்றும் பழைய ஹாலிவுட் படங்களை நினைவூட்டும் தீம் இசையும், தியேட்டரில் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோரும் முதியோரும் ஆனந்தக் கூத்தாடச் செய்கின்றன.
மினியன்களின் குரல்களும் அவை பேசும் ‘புரியா மொழி’யும் அதனை மேலும் அதிகமாக்குகின்றன. நம்மைப் பால்யத்திற்கு இழுத்துச் செல்கின்றன.
ஸ்டீவ் கரேல், வில் ஃபெரல், சோஃபியா வெர்கரா, மிராண்டா காஸ்க்ரோவ் என்று பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இதிலுள்ள முதன்மையான பாத்திரங்களுக்குக் குரல் தந்துள்ளனர்.
கிறிஸ் ரெனாட் இதனை இயக்கியுள்ளார். ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியான நிலையில், நான்காம் பாகத்தைச் சுவாரஸ்யமாகத் தருவதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படத்தில் பிரச்சனையின் தொடக்கம், அதன் விளைவாக ஏற்படும் மாற்றங்கள், அவற்றுக்கான தீர்வு என்று மூன்று பாகங்களாகத் திரைக்கதை சிறப்புற வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
கமர்ஷியல் படங்களில் முன்னணி ஹீரோக்கள் நடித்தவை எத்தகைய வரவேற்பைப் பெறுமோ, சிறந்த அனிமேஷன் பட சீரிஸ்களும் அதற்கிணையான வரவேற்பை உலகம் முழுக்கப் பெற்று வருகின்றன. அதிலொன்றாக இணைந்திருக்கிறது இந்த ‘Despicable Me 4’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மினிக்கி மினிக்கி’ : கவனம் ஈர்க்கும் தங்கலான் பாடல்!
நேரடி ஒளிபரப்பு… ஆற்றுக்குள் விழுந்த செய்தியாளர்: வைரலாகும் வீடியோ!