தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் இந்து கடவுள்களைப் பற்றிப் பேசிய கருத்துகள் தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “காங்கிரஸ் கட்சியில் உள்ள வேற்றுமைகளை விளக்குகிறேன்” என்ற பெயரில் அவர் கூறிய உதாரணங்கள், பாஜக மற்றும் பிஆர்எஸ் (BRS) கட்சிகளைத் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளன.
சர்ச்சை பேச்சு என்ன? ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, கட்சியில் ஒருமித்த கருத்து (Consensus) இல்லாதது குறித்துப் பேசினார். அப்போது அவர், “இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? சுமார் மூன்று கோடியா? அங்கு ஒருமித்த கருத்து இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசியதுதான் சர்ச்சையின் மையம்:
- “திருமணம் ஆகாதவர்களுக்குக் கும்பிட அனுமன் இருக்கிறார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேறொரு சாமி இருக்கிறார்.”
- “மது அருந்துபவர்களுக்கும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் எல்லம்மா, போச்சம்மா, மைசம்மா போன்ற தெய்வங்கள் உள்ளன. அதேசமயம், வெறும் பருப்பு சாதம் (Dal-Chawal) சாப்பிடும் சைவ பிரியர்களுக்குத் தனி சாமிகள் உள்ளன.”
- “இப்படி இந்து மதத்திலேயே கடவுள்களை வணங்குவதில் ஒருமித்த கருத்து இல்லாதபோது, காங்கிரஸ் கட்சியில் மட்டும் எப்படி எல்லோரும் ஒரே தலைவரை ஏற்றுக்கொள்வார்கள்?” என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
கொந்தளிக்கும் பாஜக: ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சு இந்துக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று பாஜக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
- மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், “காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை ரேவந்த் ரெட்டி மீண்டும் நிரூபித்துள்ளார். ஓட்டுக்காக சிறுபான்மையினரைக் கவரவே இப்படிப் பேசுகிறார்” என்று கடுமையாகச் சாடினார்.
- மற்றொரு மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, “இந்து கடவுள்களைத் தரக்குறைவாகப் பேசுவது ரேவந்த் ரெட்டியின் ஆணவத்தைக் காட்டுகிறது. இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதைக் கண்டித்து ஹைதராபாத்தில் பாஜகவினர் ரேவந்த் ரெட்டியின் உருவபொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியும் ரேவந்த் ரெட்டிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரேவந்த் ரெட்டி விளக்கம்: கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து விளக்கமளித்துள்ள ரேவந்த் ரெட்டி, “எனது பேச்சை பாஜக திரித்துக்கூறுகிறது. காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளாக எப்படிப் பலதரப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்கிறது என்பதை விளக்கவே அப்படிப் பேசினேன். நான் யாரையும் இழிவுபடுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.
தேர்தல் தோல்விகளை மறைக்கவே பாஜக இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், “சாமி விஷயத்தில் பாலிடிக்ஸ் பண்ணாதீங்க” என்று நெட்டிசன்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
