“ரேவண்ணாவின் கைது தேர்தலில் எதிரொலிக்காது” : எடியூரப்பா

Published On:

| By indhu

Revanna's arrest will not reverberate in elections - Yediyurappa

ரேவண்ணா கைது செய்யப்பட்டது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவிதத்திலும் எதிரொலிக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று (மே 5) தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் எம்.பி.,யுமான‌ பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார்.

ஏப்ரல் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகின.

25 வயதான பெண் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் வேலை செய்த 48 வயதான பெண்ணும் புகார் அளித்ததால் பிரஜ்வல் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆபாச வீடியோக்கள் வெளியான அன்றே அவர் ஜெர்மனி சென்றதாக கூறப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஆனால், அவர் தற்போது வரை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக ஜேடி(எஸ்) எம்எல்ஏ ரேவண்ணாவை எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

கடத்தப்பட்ட பெண்ணின் மகன் தனது தாய் கடத்தப்பட்டதாக ரேவண்ணா மற்றும் அவரது உதவியாளர் சதீஸ் மீது புகார் அளித்திருந்தார். இதனிடையே, கடத்தப்பட்ட பெண்ணை சிறப்பு புலனாய்வு குழுவினர் கண்டுபிடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்காலத் தடை கோரி ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரேவண்ணாவின் வீட்டில் வைத்து அவரை எஸ்ஐடி போலீஸார்நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், ரேவண்ணாவின் கைது தேர்தலில் எதிரொலிக்காது என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இன்று (மே 5) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, “இந்தியா முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக 101 சதவீதம் நிச்சயமாக வெற்றி பெரும். ரேவண்ணா கைது செய்யப்பட்டு இருப்பது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது.

ராகுல் காந்தியின் பேச்சுகள் பாஜக மற்றும் மக்களிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் வேட்பாளர் இல்லாததே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது” என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம்!

தெலுங்கு இயக்குநர்களின் கூட்டணியில் தனுஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share