அதிமுகவில் இணைய நான் ரெடி, டிடிவியும் அண்ணன் எடப்பாடியும் ரெடியா என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், சரியான நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி வருகிறார்.
பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவர் சொல்லி வரும் நிலையில், இன்று (ஜனவரி 29) தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பன்னீர் செல்வம், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், “நாங்கள் நடத்திக்கொண்டிருப்பது, அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு. நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதற்காக அல்ல.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நான் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான். பலாபழச் சின்னத்தில் போட்டியிட்டேன்.
12 நாட்கள் தான் பிரச்சாரம் செய்தேன். ஆனால் என்னை எதிர்த்து நின்றவர்கள் தேர்தலை நடத்தினார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தின் பல்வேறு தொகுதியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் கொண்டவர்கள் அங்கு வந்து போட்டியிட்டார்கள்” என்று கூறியவரிடம்,
இன்றைய கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
இதற்கு அவர், “தேனியில் அதிமுக ஒன்றாக இருக்கும் போது யார் யார் இருந்தார்களோ. அவர்கள் தற்போதும் இருக்கிறார்கள். எல்லோரும் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் தலைமைக்கு கட்டுப்படுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
ஓபிஎஸ் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவார் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு, “நீங்களே சொல்லிவிட்டீர்கள்… டிடிவி தினகரன் ஆசைப்பட்டிருக்கிறார் என்று. நட்பின் அடையாளமாக என்னை அவர் அழைக்கிறார்.
டிடிவி, என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சி பொறுப்பில் ஏற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன்.
அதிமுகவில் மீண்டும் ஒன்றுசேர நான் ரெடி… டிடிவி தினகரனும் அவரின் அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா?
எதிரும் புதிருமாக இருந்த டிடிவியும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். டிடிவி தினகரன் நினைத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி, நாங்களும் இணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும்.
நாங்களும் இணைய வேண்டும் என்கிறோம். டிடிவியும் இணைய வேண்டும் என்கிறார். இணைந்தால் தானே வெற்றி பெற முடியும். இரண்டாவது தர்ம யுத்தத்துக்கு மனோஜ் பாண்டியும், வைத்தியலிங்கமும் தான் காரணம்” என்று பதிலளித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை யார் உங்களிடம் பேசியிருக்கிறார்கள், என்ன பேசியிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிதற்கு, அதெல்லாம் பரம ரகசியம் என்று குறிப்பிட்டார் ஓபிஎஸ்.
குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று எங்களை பற்றி தவறான செய்திகளை போட வேண்டாம். எங்களை பார்த்தால் பாவமாக இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
