ரீட்ரேடிங் டயர்கள் 10 சதவிகிதம் விலை உயர்த்தி விற்பனை!

Published On:

| By admin

மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் ரீட்ரேடிங் டயர்கள் 10 சதவிகிதம் விலை உயர்த்தி விற்பனை செய்ய ஈரோடு மாவட்ட டயர் ரீட்ரேடிங் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட டயர் ரீட்ரேடிங் சங்கக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு சங்க தலைவர் அப்துல் கபூர் தலைமை தாங்கி பேசியபோது, “அனைத்து வகையான வாகனங்களிலும் டயர்களை ரீட்ரேடிங் செய்து பயன்படுத்துவது, வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும். நைலான் டயர்களை பயன்படுத்துவோர் 80 சதவிகிதமும், ரேடியல் டயர்களை பயன்படுத்துவோர் 20 சதவிகிதம் பேரும் ரீட்ரேடிங் செய்து பயன்படுத்துகின்றனர். இவற்றின் விலை குறைவு என்பதாலும், தரமாக ரீட்ரேடிங் செய்யும் தொழில் நுட்பங்கள் உள்ளதாலும் ரீட்ரேடிங் செய்கின்றனர்.

ADVERTISEMENT

ரேடியல் டயர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவது போன்ற அமைப்பாக இருப்பதால், பெரும்பாலானோர் அவற்றை ரீட்ரேடிங் செய்ய முன்வருவதில்லை. சமீப காலமாக சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு, இயற்கை ரப்பர் மற்றும் பெட்ரோலிய பொருட்களில் இருந்து கிடைக்கும் ரப்பர் மூலப்பொருட்களின் விலை 60 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட இயற்கை ரப்பர் தற்போது ரூ.170 ஆக விலை உயர்ந்துள்ளது. வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் கூலியும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட இந்தத் தொழில் பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வாலும், கொரோனா காலத்தில் வாகன இயக்கம் குறைந்ததாலும், இந்த தொழிலில் இருந்த 50 சதவிகிதம் பேர் தற்போது தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். இதன் காரணமாக 5 ,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

ADVERTISEMENT

எனவே இந்தத் தொழிலை காக்கும் வகையிலும், மூலப்பொருட்களின் விலையேற்றத்தாலும், இன்று (ஜூன் 20) முதல் ரீட்ரேடிங் செய்யப்பட்ட டயர்களை 10 சதவிகிதம் விலை உயர்த்தி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு வாகன உரிமையாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share