பிஜேடி கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து அக்கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் இன்று (ஜூன் 9) அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டுவந்த பிஜு ஜனதா தளம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 51 இடங்களுடனும், மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமலும் படுதோல்வியை சந்தித்தது.
இதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், ஒடிசாவில் தொடர் வெற்றிகளை பெற்று வந்த நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பேசப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கே. பாண்டியனின் எழுச்சியும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது.
என்னை மன்னிக்கவும்.. விலகுகிறேன்!
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ”இப்போது சுயநினைவுடன் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை.
சிவில் சர்வீஸ் தொடங்கியதில் இருந்து இன்று வரை தான் எந்த சொத்தும் குவிக்கவில்லை. அப்போதிருந்த தனது சொத்துகள் அப்படியே உள்ளது.
இந்தப் பயணத்தில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரச்சாரத்தால் பிஜூ ஜனதா தளம் ஒடிசாவில் தோல்வியடைந்திருந்தால், என்னை மன்னிக்கவும்”
ஒடிசா மக்கள் மற்றும் ஜெகநாதர் மீது தனது இதயம் எப்போதும் இருக்கும்” என்று வி.கே. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா அரசியலில் சூறாவளி பயணம்!
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து பிரச்சார களத்திலும் பாண்டியன் கை ஓங்கியது.
இதனையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர்கள் மண்ணின் மைந்தனாக இல்லாத பாண்டியனை குறிவைத்தே பிஜேடிக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
குறிப்பாக பிரதமர் மோடி, ”பாஜக முதல்வர் வேட்பாளர் ஒடிசாவில் பிறந்து ஒடியா பேசும் ஒருவராக இருப்பார் என்று வலியுறுத்தினார். நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை மோசமாகிவிட்டது. பிஜேடி மீண்டும் வெற்றி பெற்றால் பாண்டியன் தான் ஒடிசா முதல்வராக பதவியேற்பார்” என்றும் விமர்சித்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 78 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வியை சந்தித்தது. மக்களவைத் தேர்தலிலோ ஒரு இடத்தைக் கூட பிஜேடி கட்சியால் பிடிக்க முடியவில்லை.
பாண்டியனை பாராட்டிய பட்நாயக்
இந்த நிலையில் நேற்று தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், வி.கே. பாண்டியன் குறித்து பெருமையாக பேசியிருந்தார்.
அவர், “எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை. தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் கடுமையான உழைப்பாளி” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜோதிமணி வெற்றி: சிறையில் இருந்தே சம்பவம் செய்த செந்தில் பாலாஜி