ரோகித் சர்மாவை தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 12) அறிவித்துள்ளார். retirement from test is not easy one for me – virat kohli
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியின் பக்கம் அனைவரது கவனமும் குவிந்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் ’ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவிக்கிறாரா?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பிசிசிஐ, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட்கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

அதில், ”டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ப்ளூ ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை சொன்னால் இந்த வடிவம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வடிவம் என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் நான் சுமந்து செல்லும் பாடங்களை கற்றுக்கொடுத்தது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று இருக்கிறது. அமைதியான மோதல், நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத சிறிய தருணங்கள், ஆனால் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும்.
நான் இந்த வடிவத்தில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். நான் அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது.
விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, வழியில் என்னைப் பார்த்ததாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி 9230 ரன்கள் அடித்துள்ளார். அதில் 7 இரட்டை சதம், 30 சதம், 31 அரைசதம் ஆகியவை அடங்கும்.
