முன்னாள் நீதிபதி டி. ராஜாவுக்கு எதிராக ஊழல் புகார்கள் உள்ளதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது. retired acting Chief Justice d raja
பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான சவுரவ் தாஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் நீதிபதி டி ராஜா குறித்து மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
1.டி. ராஜா நீதிபதியாகப் பணியாற்றியபோது அவருக்கு எதிராக ஊழல் அல்லது தவறான நடத்தை குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஏதேனும் புகார்கள் வந்ததா?
2.ஆம் எனில், எத்தனை புகார்கள் பெறப்பட்டன?
3.அந்தப் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இதற்கு உச்ச நீதிமன்றத்தின் மத்திய பொது தகவல் அதிகாரியான (CPIO) கூடுதல் பதிவாளர் பதில் வழங்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று கூடுதல் பதிவாளர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சவுரவ் தாஸ் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்திற்கு (சிஐசி) எடுத்துச் சென்றார்.
இதை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், முன்னாள் நீதிபதி டி ராஜாவுக்கு எதிரான ஊழல் புகார் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துவிட்டது.
இது தனிப்பட்ட தகவல் என்றும் இந்த தகவலை கோர சவுரவ் தாஸுக்கு உரிமை இல்லை என்றும் மத்திய தகவல் ஆணையம் கூறிவிட்டது.
இந்த நிலையில் தான் சவுரவ் தாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “நீதித்துறையின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை நமது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமானவை. இதுபோன்ற தகவலை பொதுமக்களுக்கு தர மறுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன் நேற்று (மே 26) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றத்தின் பொது தகவல் அதிகாரிக்கு நீதிபதி சச்சின் தத்தா உத்தரவிட்டார். இந்த வழக்கை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜா. சுமார் 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
இவர் மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த போது ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஓய்வு பெற 6 மாதமே இருந்த சமயத்தில் பணியிட மாறுதல் உத்தரவு வந்ததால் அவருக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியது. அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து டி.ராஜா சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாகவே பணியை தொடர்ந்தார். கடந்த 2023 மே 24 அன்று பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 25 ஆண்டுகளில் 100 நாட்களுக்கு மேல் பதவி வகித்த முதல் பொறுப்பு தலைமை நீதிபதி என்ற பெருமையை பெற்றவர் ஓய்வு பெற்ற நீதிபதி டி.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. retired acting Chief Justice d raja