தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்திருக்கிறது.
“அண்ணாமலை மைக்கைப் பார்த்துவிட்டாலே பேட்டி கொடுக்கத் தொடங்கிவிடுவார். அப்படி ஒரு வியாதி. எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை” என்று எடப்பாடி பழனிசாமி கூற,
இதற்கு அண்ணாமலை, “எடப்பாடி எப்படி பதவிக்கு வந்தார் என்று தெரியும். தற்குறி பழனிசாமி போல மானம்கெட்டு நான் பதவி வாங்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர். “இன்னொரு தலைவரின் சொற்பொழிவுக்கு நான் பதில் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். பேசுவதில் அவரவர்களுக்கு ஒரு பாணி இருக்கும். அது அவரோட பாணி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதுபற்றி அவரிடம் கேட்பதுதான் சரி.
என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்கக் கூடாது என்பது எனக் கோரிக்கை” என்றார்.
திமுக, அதிமுகவுடன் கூட்டணியே கிடையாது என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே, இதற்கு உடன்படுகிறீர்களா என்ற கேள்விக்கு, “மாநில தலைவருக்குக் கருத்துச் சொல்லவும், முடிவு எடுக்கவும் உரிமை இருக்கிறது. அது விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம். கருத்துகள் கேட்கப்படலாம்.
ஒரு மேடையில் மட்டும் முடிவு செய்யப்படுவது… சரியா என்பது எனது கேள்வி?. உடனே அண்ணாமலைக்கும் எனக்கும் இடையே சர்ச்சையை உருவாக்கிவிடக் கூடாது.
நானும் ஐந்தரை ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறேன். எனது அனுபவம் வேறு, அவரது அனுபவம் வேறு. இப்போது நான் வெறும் கார்யகர்த்தா தான். அவருடைய கருத்துக்கு மறுப்பு பேச முடியாது. வரும் காலத்தில் பல விவாதங்கள் வரலாம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு : கங்கனாவுக்கு பாஜக தலைவர் கண்டனம்!
“நகைச்சுவையை பகைசுவையாக்காதீங்க” :ரஜினியின் பதில் – துரைமுருகன் விளக்கம்!