ஆளுநர்களுக்கு கடிவாளம்: பாஜக அல்லாத முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Jegadeesh

சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் இதேபோல் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 12) கடிதம் எழுதி உள்ளார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும், நமது நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை என்றும் அதனால் மாநில செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப் போயிருப்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ‘ஆன்லைன் ரம்மியை’ தடை செய்வதற்கான மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும், இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன என்றும் தனது கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என்று கருதி, அது சம்பந்தமாக 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் சாராம்சத்தையும் தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என தாம் நம்புவதாகவும், அவர்களது மாநில சட்டமன்றத்திலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் மாநில அரசுகள் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதையை நிலைநிறுத்துவதற்காக தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரதமர் மோடியிடம் கடிதம் வழங்கிய ராஜாஜியின் பேரன்!

500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: செந்தில் பாலாஜி

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share