பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஜனநாயகன் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க கோரி கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என அறிவிக்கப்பட்டிருந்ததால், படத்தைப் பார்க்க ஆவலோடு இருந்த அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ஜனநாயகன் படத்தை மறு தணிக்கை குழுவினர் பார்வையிட்டனர். ஆனால் தற்போது வரை ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில், விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் முழு படமும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்தது.
இச்சம்பவம் படக்குழுவினர் மற்றும் ஒட்டுமொத்த திரை உலகினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையில், படத்தின் உதவி எடிட்டர் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு பாப்பாபட்டி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை நீக்கக் கோரியும் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, 1996 முதல் 2006 வரை அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. பாப்பாபட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதை, மற்றொரு சமூகத்தினர் எதிர்த்ததால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.









