Resident Evil: The Final Chapter படத்துக்கு கதை எழுதுவதைவிட கஷ்டமான ஒன்று இருக்கவே முடியாது. படத்தை கண்டிப்பாக இந்த பாகத்தோடு முடித்துக்கொள்ள வேண்டும் என மில்லா ஜோவோவிக் சொல்லிவிட்டார். இதற்கு முந்தைய ஐந்து பாகங்களில் சொல்லாமல் விட்ட கதைகள் அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி அல்லது காற்புள்ளியை வைக்க வேண்டும். எந்தக் காரணங்களும் சொல்லாமல் படத்தை முடித்தால், திருப்திப்படாத ரசிகர்களால் தூக்கி வீசப்படும். இப்படி பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரிலீஸாகியிருக்கிறது Resident Evil: The Final Chapter.
வழக்கம்போலவே விலாசமே இல்லாமல் ஒரு பதுங்குகுழிக்குள்ளிருந்து வெளியே வரும் ஆலைஸுக்கு, இதுவரை நெகடிவ் கேரக்டராக இருந்த ரெட் குயின் உதவுகிறது. ஏனென்று கேட்டால், **அம்பிரல்லா கார்ப்பரேஷனை சார்ந்தவர்களை என்னால் தாக்க முடியாது. நான் அப்படி புரோகிராம் செய்யப்படவில்லை** என அடிக்குரலில் சீறும் சின்ன கம்ப்யூட்டரின் பேச்சை கேட்டுக்கொண்டு மீண்டும் ரெக்கூன் சிட்டிக்கே பயணமாகிறார் ஆலைஸ். இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான டி-வைரஸை அழிக்கக்கூடிய ஏர்-போர்ன் ஆண்டி வைரஸும், வில்லன்கள் ஐஸக் மற்றும் வெஸ்கர் ஆகியோரும் அங்குதான் இருக்கிறார்கள்.
ஆலைஸ் யார்? ரெட் குயின் யார்? அம்பிரல்லா கார்ப்பரேஷன் எதற்காக உருவாக்கப்பட்டது? மனித இனத்தை ஏன் அழிக்கிறார்கள்? என்று 15 வருடங்களாக பதிலளிக்கப்படாமல் இருந்த கேள்விகளுக்கு இந்த ஆறாவது மற்றும் கடைசித் திரைப்படம் பதில் சொல்லியிருக்கிறது. இயற்கை பேரிடர்களாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் மனிதன் வாழத் தகுதியில்லாத இடமாக மாறப்போகும் பூமியை ஆலைஸ் காப்பாற்றுகிறாரா என்பது கதை.
படக் குழுவினருக்கு சாதகமாக இருக்கும் ஒரே விஷயம், இந்தக் கதை ஒரு கற்பனைக் கதை என்பது மட்டும்தான். இவர்கள் நினைக்கும்படி கதையை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம் என்ற ஓப்பனிங் இருந்ததால், இயக்குநரும் ஆறு பாகத்துக்கும் கதையை எழுதியவருமான Paul W. S. Anderson சரியாக ஸ்டிரைக் செய்திருக்கிறார். ஆன்ட்டி வைரஸைத் தேடி ரெக்கூன் சிட்டிக்குச் செல்லும் ஆலைஸ், டி-வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும் மனிதர்களை அழைத்துக்கொண்டு ரெக்கூன் சிட்டியின் லேபுக்கு செல்கிறார். அங்கு ஒவ்வொருவராக இறந்துவிட, **யாரோ நம்மில் ஒருவர் அம்பிரல்லா கார்ப்பரேஷனின் ஒற்றனாக இருக்கிறான்** எனச் சொல்லிக்கொண்டிருக்க, ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இந்த இடத்தில் மக்களை டி-வைரஸிடமிருந்து காப்பாற்றிவரும் ஆலைஸ்தான் உண்மையான வில்லி என்றுகூறி முடிக்குமளவுக்கு ஒரு கதையை உருவாக்கியிருந்தார்.
மொத்தத்தில் இத்தனை ஆண்டுகள் செய்த தவறுகளை சரிசெய்யும் ஒரு வாய்ப்பாகவும், ஹாலிவுட் வரலாற்றில் தனது பெயரை தவறாகவும் பதிவு செய்துவிடாமல் இருக்க, Paul W. S. Anderson கடினமான முயற்சி செய்தது திரையில் பார்க்கும் காட்சிகளில் தெரிகிறது. பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளும், ரசிகர்களின் நிலைமறந்து விசிலடிக்கும் அளவுக்கு விவேகமான காட்சிகளும் என Resident Evil: The Final Chapter சிறப்பான படமாக இருக்கிறது. மில்லா ஜோவோவிக் பைக்கை எடுப்பதற்காக சண்டையிடும் காட்சியில் தியேட்டரை கிழித்துச்சென்ற விசில் சத்தங்கள், இளைஞர்கள் எதனால் ஹாலிவுட் படங்களின் மீது கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு செலுத்துகின்றனர் என்பதை தெரியவைக்கிறது.
