கீழடியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

Published On:

| By Balaji

கீழடியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய பழைமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால் கீழடியைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கீழடியில் 2015 முதல் தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. பழைமையான நகர நாகரிகம் கீழடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது முதல் மூன்று அகழாய்வுப் பணிகளில் 7,818 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. நான்காம் கட்ட அகழாய்வில் 5,820 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதியுடன் இந்தப் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு மேலும் இந்தப் பணி தொடரும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

குறிப்பாக, தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று இந்த ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில் கீழடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குடும்பம் குடும்பாக கீழடிக்கு வருகை தருவதாகத் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்படும் பொருட்களைக் கண்டு, புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் மொழி ஆர்வலர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 2,000த்துக்கும் மேற்பட்டோர் கீழடிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அங்கு செல்பவர்கள் கீழடியைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கீழடியில் நடந்துவரும் ஐந்தாம் கட்ட அகழாய்வு மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையால் அங்கு தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. குழிகளில் உள்ள நீர் பம்ப் செட் மூலம் வெளியேற்றப்படுகிறது.

மழை காரணமாக கீழடியில் அகழாய்வைப் பார்வையிடக் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமாகக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share