அமெரிக்க வரி விதிப்பால் நெருக்கடி.. வங்கி கடனை திருப்பி செலுத்த ஓராண்டு அவகாசம்- இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு வேண்டுகோள்

Published On:

| By Pandeeswari Gurusamy

Request for a one-year grace period to repay loans

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 50 சதவீத இறக்குமதி வரி இன்று (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினர் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழலில், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு அவகாசம் வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு சுமார் 73,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

தற்போதைய 50 சதவீத வரி விதிப்பால், நமக்கும் போட்டி நாடுகளுக்கும் இடையே 30 சதவீத வரி வித்தியாசம் உள்ளது. இதனால் நமது வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. புதிய ஆர்டர்கள் பெறுவதில் பெரும் சவால் நிலவுவதால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.கொரோனா காலத்தில் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டது போலல்லாமல், இந்த முறை ஜவுளி, தங்க நகை உள்ளிட்ட ஐந்து தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகளைப் போல, தற்போது நெருக்கடியில் உள்ள தொழில்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும். வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த ஓராண்டு அவகாசம் வழங்கினால், வர்த்தகர்களிடையே நம்பிக்கை ஏற்படும்.

ஐரோப்பிய யூனியன் போன்ற பிற சந்தைகளை உடனடியாகக் கைப்பற்றுவது எளிதல்ல, ஏனெனில் அங்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. நமக்கும் போட்டி நாடுகளுக்கும் இடையே வரி விகித வித்தியாசம் இருப்பதால், அரசு ஊக்கத்தொகை வழங்கினால், அமெரிக்க சந்தையில் ஏற்படும் இழப்பை ஓரளவு ஈடுகட்டி, புதிய சந்தைகளைப் பிடிக்க முடியும்.

ADVERTISEMENT

அதேவேளையில், அமெரிக்க சந்தையை முழுமையாகத் தவிர்க்க இயலாது. எனவே, மத்திய அரசு அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 25 சதவீத வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share