டிஜிட்டல் திண்ணை: மீண்டும் மணல் குவாரிகள் திறப்பு- கோட்டையில் ரகுபதி முக்கிய ஆலோசனை!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும் மணல் குவாரிகள் மீண்டும் திறப்பு என்ற தலைப்புச் செய்தியை படித்தபடியே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Reopening of sand quarries

திருச்சியில் அண்மையில் தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில், மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 23-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இதை நமது மின்னம்பலத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் இன்று (மே 20) லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், புதிய கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மணல் விவகாரத்தில் 2 விஷயங்களுக்கு தடை இருந்தது. ஒன்று, மணல் ஒப்பந்ததாரர்களின் இரண்டாவது விற்பனை என்ற ‘Second Sale’க்கு எதிரான தடை; மணல் லோடிங் டிரான்ஸ்போர்ட்டை தனியாருக்கு தர தடை. இந்த தடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேலே சொன்ன தடைகளை நீக்கி மணல் குவாரிகளைத் திறக்கலாம் என அனுமதி தந்துவிட்டது.

இந்த தீர்ப்பு வெளியான நிலையில்தான் இன்று கோட்டையில் புதிய கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதியை லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், கிரஷர் உரிமையாளர்கள், ஹைவேஸ் ஒப்பந்ததாரர்கள், பில்டர்ஸ் அசோசியேன்களின் நிர்வாகிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இதில் மிக முக்கியமாக மணல் குவாரிகளை மீண்டும் திறக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்த 15 நாட்களில் மணல் குவாரிகளை மீண்டும் திறந்துவிடலாம் என அமைச்சர் ரகுபதி உறுதி அளித்தாராம்.

அத்துடன் எம் சாண்ட் லோடுகளுக்கான பில்லிங் மற்றும் ஓவர் லோடு விவகாரம் குறித்தும் அமைச்சர் ரகுபதியுடன் விவாதிக்கப்பட்டது. மேலும் ஆந்திரா மணலுக்கு பசுமை வரியுடன் அனுமதி தர வேண்டும் என்று பில்டர்ஸ் அசோசியேசன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

எம் சாண்ட் விவகாரத்தில் ஜல்லி விலை ரூ 4,000, எம் சாண்ட் விலை ரூ 5,000 என்பதை குறைக்க வேண்டும் என்பது குறித்தும் அமைச்சர் ரகுபதியுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றன.

இந்த சந்திப்புக்குப் பின்னர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரோ, கனிம வளத்துறை இயக்குநரை சந்தித்து எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்ற பின்னரே அடுத்த கட்ட முடிவைத் தெரிவிப்போம் என்றனர் என டைப் செய்து சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Reopening of sand quarries

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share