நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவர், பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடிதம் எழுதியுள்ளார். removal of justice yashwant verma
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் யஷ்வந்த் வர்மா. அப்போது டெல்லியில் இருந்த அவரது அதிகாரபூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயை அணைக்கும் பணியின் போது அவரது வீட்டில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றம் உள் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய விசாரணை மேற்கொண்டார்.
அவரிடம், பணம் கண்டறியப்பட்ட அறை தனது இல்லத்தின் அறை இல்லை என்றும் தானோ தனது குடும்பத்தினரோ அந்த அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை என்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியிருந்தார்.
இதையடுத்து மேல்விசாரணைக்காக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தாவாலியா, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனுசிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணை குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்தார்.
இந்த குழு விசாரணை மேற்கொண்டு நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் கடந்த மே 4ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது.
இது தொடர்பாக விசாரணை வட்டாரங்கள் கூறுகையில், டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சை அரோரா உட்பட 50க்கும் மேற்பட்டவர்களிடம் நீதிபதிகள் குழு விசாரணை மேற்கொண்டது. அவர்களின் வாக்குமூலமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
அதன்படி நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் இருந்ததற்கான ஆதாரத்தை அந்த குழு கண்டறிந்துள்ளது” என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் விசாரணை அறிக்கை நகலை இணைத்து குடியரசுத் தலைவர், பிரதமருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று (மே 8) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
உள்ளக விசாரணை நடைமுறையின் படி சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எதிராக நிர்வாக நடவடிக்கை அவசியம் என கருதினால் தலைமை நீதிபதி அந்த அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்புவார். அதன்படி இந்த விசாரணை அறிக்கையையும் அனுப்பியுள்ளார்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இன்னும் இந்த விசாரணை அறிக்கையை வெளியிடவில்லை
தற்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். ஆனால் அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. removal of justice yashwant verma