டெல்டா விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், தமிழகத்திற்கு கர்நாடக அரசு குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீரை வழங்காததால் பயிர்கள் கருகுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இரண்டு முறை மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் நீர் பற்றாக்குறையால் கருகிப் போகும் குறுவை நெல் சாகுபடி பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “குறுவை நெல் சாகுபடி பயிர்கள் கருகியிருக்கின்றன. அதற்கு முழுமையான காரணம் இன்றைக்கு ஆண்டு கொண்டிருக்கின்ற திமுக அரசு தான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அணையில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நமக்கு வழங்க வேண்டிய டிஎம்சி நீரை வழங்காததால் தான் பயிர்கள் கருகிப் போயிருக்கின்றன.
இதற்கு அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம். என்.எல்.சி விவகாரத்தில் பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அதே பாணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
2007-ல் காவிரி நடுவர் நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளுக்கு பின்னால் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசிடம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நமக்கு வழங்கப்பட்டுள்ள நீர் போதாது. எனவே காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மத்திய அரசிடம் இருந்து அரசாணையை பெற்று தர வேண்டும். அப்போது அந்த தீர்ப்பானது நடைமுறைக்கு வரும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் உடனே துரைமுருகன் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை வழக்காக எடுத்து செல்ல முடியாது. இதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று சொன்னார். ஆனால் கர்நாடக அரசு தங்களுக்கு வழங்கிய நீர் போதாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாது கூடுதலாக பெங்களூவிற்கு குடிநீர் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே ஆரம்பத்தில் இருந்தே திமுக பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தால் இன்றைக்கு பயிர்கள் கருகுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி
அயோத்தி ராமர் கோவில்: 400 கிலோ எடையுள்ள பூட்டு வழங்கிய முதியவர்!