தஹ்ரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் மத்திய அரசு தலையீட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை சிறை தண்டனையாகக் குறைக்கப்படுவதாக கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக கத்தார் நீதிமன்றம் முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேரையும் விடுதலை செய்துள்ளது.
இதனையடுத்து அவர்களில் ஒருவர் தவிர 7 பேர் இன்று அதிகாலையில் இந்தியா திரும்பியுள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்திய முன்னாள் கடற்படை வீரர்களை விடுவித்ததை இந்திய அரசு வரவேற்கிறது. அவர்களில் எட்டு பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களை விடுதலை செய்து இந்தியா திரும்புவதற்கு கத்தார் அரசின் அமீர் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க… இதையெல்லாம் பண்ணாதீங்க!