“கல்லூரிக்குத் தினமும் சென்று படிக்க முடியாத சூழல்… வேலையைப் பார்த்துக்கொண்டே டிகிரி முடிக்க ஆசை…” என்று நினைக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பணிபுரியும் நபர்களுக்கும் உயர்கல்வித் துறை ஒரு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்புகளைத் தொடங்குவதற்கு இதுவரை இருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC).
இதன்படி, தகுதியுள்ள பல்கலைக்கழகங்கள் இனி ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க யுஜிசி-யின் முன் அனுமதியை (Prior Approval) எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
யாருக்கு இந்தச் சலுகை?
யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தச் சலுகை எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் கிடையாது. தரமானக் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு முக்கியத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
NAAC மதிப்பீடு: தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) ஆய்வில், 3.26 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்ற பல்கலைக்கழகங்கள்.
NIRF ரேங்கிங்: தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் (NIRF), பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் கல்வி நிறுவனங்கள்.
இந்தத் தகுதிகளைப் பெற்ற பல்கலைக்கழகங்கள், இனி தாங்கள் விரும்பும் ஆன்லைன் பட்டப்படிப்புகளைத் தன்னிச்சையாகத் தொடங்கலாம். இதற்கென டெல்லிக்கு நடையாய் நடக்கத் தேவையில்லை.
என்ன காரணம்?
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் (NEP 2020) முக்கிய இலக்கே, உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை (GER) 50 சதவீதமாக உயர்த்துவதுதான். கல்லூரிக் கட்டமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் இந்த இலக்கை எட்ட முடியாது. இணையவழிக் கல்வி மூலமே கோடிக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதால் இந்த அதிரடித் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையும் உண்டு:
“அனுமதி தேவையில்லை என்று சொல்லிவிட்டதால், இஷ்டத்திற்குப் பாடங்களை நடத்த முடியாது” என்றும் யுஜிசி செக் வைத்துள்ளது. ஆன்லைன் படிப்புகளுக்கான பாடத்திட்டம், தேர்வுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் முறை ஆகியவை யுஜிசி-யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும், படிப்பு தொடங்குவது குறித்த தகவல்களை மட்டும் யுஜிசி-க்குத் தெரிவித்தால் போதுமானது.
மாணவர்களுக்கு என்ன லாபம்?
கிராமப்புற மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்தபடியே ஆன்லைனில் டிகிரி முடிக்க முடியும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் எளிதாகச் சேர வாய்ப்பு உருவாகும். இந்த புதிய நடைமுறை மூலம், கல்வி இனி ‘வகுப்பறைச் சுவர்களுக்குள்’ மட்டும் முடங்கி இருக்காது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்கள் இந்தத் தகுதிப் பட்டியலில் வருவதால், இனி இங்கிருந்தும் அதிகப்படியான ஆன்லைன் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
