எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒத்த கருத்துடைய தோழமைக் கட்சிகளுடன் கரங்கோர்த்து செயல்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ‘தி ஹிந்து’வில் இன்று (ஏப்ரல்11) சோனியா காந்தி தலையங்கப் பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் நாடாளுமன்ற, நிர்வாக, நீதித்துறைகளை படிப்படியாக செயலற்றதாக்கி வருகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
“நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் தவறாகவே பயன்படுத்தி வருகிறது. மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் வேரையே பிடுங்கி எறியும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான அவர்களது ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது. மேலும் மோடியின் ஆட்சியில் அவரது கட்சியினரும், ஆர்.எஸ். எஸ். அமைப்பினரும் சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத மோடி ஒருமுறை கூட அமைதி அல்லது நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.
மோடியின் ஆட்சியில் மதப் பண்டிகைகள் கொண்டாட்டம் என்பதைத் தாண்டி மற்றவர்களை அச்சுறுத்தும் மற்றும் கொடுமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால் மோடியின் அறிக்கைகள் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது இந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப மோடி வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி.
மேலும் “ அடுத்த சில மாதங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் முக்கியமான சோதனையாக இருக்கும். மோடி அரசாங்கம் தனது ஒவ்வொரு அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்துவருகிறது. பாரத் ஜோடோ யாத்ராவில் செய்தது போல், காங்கிரஸ் கட்சி தனது செய்தியை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். மேலும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் கொள்கைகளை பாதுகாக்க ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்கும்.
காங்கிரஸின் இந்த போர் மக்களின் குரலைப் பாதுகாப்பதற்கானது. பிரதான எதிர்க்கட்சியாக எங்கள் கடமையை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். இந்த நோக்கத்தை அடைய, ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தனது கட்சி தயாராக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார் சோனியா காந்தி.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கேள்விக்குறியாக கருதப்பட்ட நிலையில் சோனியா காந்தியின் இந்த கருத்து ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்திருக்கிறது,
அண்மையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, “மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் அல்ல… காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. சாவர்க்கரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எதிர்த்தன. மகாரஷ்டிர மாநிலத்தில் காங்கிரசோடு கூட்டணியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதுகுறித்து சோனியா, ராகுல் காந்தி இருவரிடமும் பேசியிருக்கிறார். ‘சாவர்க்கர் பற்றி நீங்கள் குறிப்பிட்டது மகாராஷ்டிரத்தில் பலரது மனதை புண்படுத்தியுள்ளது’ என்று கூறியுள்ளார் பவார். அப்போது ராகுல் காந்தி, ‘நான் சொன்னது உண்மைதானே…’ என்று கேட்டிருக்கிறார். சோனியாவும், ‘கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து ராகுல் பேசவில்லையே… இது காங்கிரஸின் கொள்கை’ என்று சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் தி இந்துவில் இன்று வந்த சோனியாவின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
–வேந்தன்
