8 ஆண்டுகளுக்கு முன் மாயமான கணவர்… காட்டிக்கொடுத்த ரீல்ஸ் : பப்லுவுக்கு தக்க பாடம் புகட்டிய மனைவி!

Published On:

| By christopher

reels help to identitified her missing husband

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னைக்கு உலகம் சுருங்கிவிட்டது என பல பேர் சொல்ல கேட்டிருப்போம். அந்த வகையில் காணாமல் போவோரை கண்டுபிடித்து கொடுக்கும் நவீன மாயக் கண்ணாடியாக உருவெடுத்துள்ளது ரீல்ஸ் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் ரீல்ஸ் தான், 8 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒருவரை அவரது ரியல் மனைவிக்கு காட்டி கொடுத்துள்ளது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் ரீல்ஸில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் டான்ஸ் ஆடுவதை கண்டது தான்.

ADVERTISEMENT

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் என்கிற பப்லு. கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

எனினும் அடுத்த சில மாதங்களில் கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு, பப்லு திடீரென மாயமாகிவிட்டார். அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அவரது தந்தை சாண்டிலா காவல் நிலையத்தில் தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்தார்.

ADVERTISEMENT

அந்த பெண்ணுக்கு 2018ஆம் ஆண்டு மகன் பிறந்த நிலையில், 8 ஆண்டுகளாக தனது கணவருக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் தான் எதேச்சையாக தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஆடிக்கொண்டிருப்பதை ரீல்ஸில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக உடனடியாக சாண்டிலா போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோவில் இருப்பது பப்லுதான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரை கண்டுபிடித்து காவலில் எடுத்து விசாரித்த போது, ஹர்தோயில் இருந்து ஓடிப்போன அவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஜாலியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பப்லுவின் முதல் மனைவி உடனடியாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பப்லு மீது பிஎன்எஸ் பிரிவு 82(1) (இரட்டைத் திருமணம்) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்ப்பிணி மனைவி என்றும் பார்க்கமால், தனியே தவிக்கவிட்டு தலைமறைவானதுடன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து ஜாலியாக இருந்த ஒருவரை ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்தது அம்மாநிலம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share