Red Letter Day உச்சநீதிமன்றத் தீர்ப்பு… அந்த நிமிடத்தில் நடந்தது என்ன? ஸ்டாலின்

Published On:

| By Aara

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பற்றி தான் அறிந்த நிமிடங்களையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் இன்று (ஏப்ரல் 10) உங்களில் ஒருவன் மடல் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 8 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பளித்தது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை என்றும், அவர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 சட்ட மசோதாக்களை உச்ச நீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. Red Letter Day supreme Court Stalin

இந்த தீர்ப்பு வந்தபோது சட்டமன்றத்தில் இருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது நடந்த விஷயங்களை பற்றி இன்று (ஏப்ரல் 10) உங்களில் ஒருவன் என்ற தொண்டர்களுக்கு எழுதும் மடலில் பகிர்ந்து கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அதில்.,

Red Letter Day

“சட்டப் போராட்டத்தின் வழியே திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைமையிலான அரசும் பெற்றுத் தருகின்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவையாக இருக்கும் என்பதுதான் வரலாறு. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை இரத்து செய்து, மாநில உரிமைகளைக் காத்திடும் மகத்தான தீர்ப்பினை, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படக்கூடிய Red Letter Day ஆகும்.

மாநில உரிமைகளுக்கான நமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு மைல்கல்லாக ஏப்ரல் 8-ஆம் நாள் வெளியான மகத்தான தீர்ப்பு அமைந்துள்ளது.
பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் முதன்மை இடங்களைப் பிடித்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்தப் பெருமையைச் சிதைக்கும் வகையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆளுநர் உயர்கல்வியில் அறமற்ற அரசியலைப் புகுத்தி, காவிச் சாயம் பூசிக்கொண்டிருப்பதற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், ஜனநாயக மாண்புகளைச் சிதைக்கும் அதிகார அத்துமீறல்களைத் தொடர்ந்து கொண்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆளுநர்களின் அதிகார அத்துமீறலுக்கு எதிரான வழக்குகள் என்பவை உச்சநீதிமன்றத்திற்குப் புதியதன்று. ஒன்றிய பா.ஜ.க அரசு தன்னால் வெற்றிபெற முடியாத மாநிலங்களில், மாற்றுக் கட்சி அரசுகளின் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே ஆளுநர்களை நியமித்து, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கே ஆளுநர் மறுத்துவந்த நிலையில் அது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டது. மேற்கு வங்கம், கேரளா என பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.

தீர்ப்பு வந்த நேரம்…

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படுவார் என்றும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டிருந்ததையும், தன் அதிகாரத்திற்கு மீறிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்ததையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 8 அன்று காலையில் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்ற நிலையில், தீர்ப்பு வெளியாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்பதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றுகின்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது நியமனப் பதவியில் உள்ள ஆளுநரின் வேலை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.பர்திவாலா, திரு.மகாதேவன் அமர்வின் தீர்ப்பு தெளிவாகத் தெரிவித்தது.

இந்தச் செய்தி, சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்த உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்தவுடன், உடனடியாக அவையில் இருந்து வெளியே வந்து, இந்த மகிழ்ச்சிகரமான வெற்றி தீர்ப்பு குறித்த அறிவிப்பை எழுதி, அவைக்குச் சென்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் வாசித்தேன்.

எந்த சட்டமன்றத்தில் அண்ணா… எந்த சட்டமன்றத்தில் கலைஞர்…

எந்தச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டி மாநில உரிமைகளின் குரலைப் பேரறிஞர் அண்ணா உரக்க முழங்கினாரோ, எந்தச் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றினாரோ அந்த சட்டமன்றம்தான் வலிமையானது, ராஜ்பவனுக்கு அதிகாரமில்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைப் பாராட்டி அறிவிப்பை வெளியிட்டேன். முதலமைச்சரான என் அறிவிப்பைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உள்ள தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஆதரித்துப் பேசினார்கள். Red Letter Day supreme Court Stalin

டெல்லி மூத்த வழக்கறிஞர்களுடன் போன்…

இந்த வழக்குத் தொடரப்பட்டதிலிருந்தே வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து, மாநில உரிமைகளை நிலைநாட்ட எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள், ஆதாரங்கள் குறித்து கலந்துரையாடி வந்தேன். கழகம் எப்போதும் சொல்லி வருவது போல, ஆளுநர் பதவி என்பது ஒன்றிய – மாநில அரசுக்கிடையிலான தபால்காரர் பணிதான் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்புரைத்திருக்கிறது.

தீர்ப்பு வெளியான நாளில், கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி, வெற்றித் தீர்ப்பு கிடைத்திட காரணமாக இருந்த முகுல் ரோஹத்கி, ராகேஷ் திரிவேதி, அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.

வின் சன் ஆன வில்சன்…

இந்த வழக்கின் வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் நேரில் சந்தித்து என்னிடம் தீர்ப்பின் விவரங்களைத் தெரிவித்தபோது, தலைவர் கலைஞர் சொன்னது போல ‘வின்’சன்னாக வில்சன் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டி மகிழ்ந்தேன்.

மாநில உரிமைக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசின் தொடர் சட்டப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியமான வெற்றி என்பதால், தங்கள் மாநிலங்களில் ஆளுநரின் அத்துமீறல்களால் ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிற அரசுகளும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு பெற்றுத் தந்துள்ள தீர்ப்பினை முன்மாதிரியாக வைத்து தங்களின் வழக்குகளை முன்னெடுத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

கேரள மாநில முதலமைச்சர் சகாவு பினரயி விஜயன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பாராட்டி கருத்து வெளியிட்டார். பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான செய்தியாக இந்தத் தீர்ப்பு இடம்பெற்றது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் தலைவர்கள், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள பெரியோர்கள் எனப் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாய்க் கழகத்தின் பாராட்டு!

வெற்றித் தீர்ப்பின் மகிழ்ச்சியைப் பாராட்டுவதற்கு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் நேரில் வருகை தந்தார். “சமூகநீதியின் சரித்திர நாயகன் என்று உங்களை சொல்லி வருகிறோம். இப்போது மாநில உரிமையின் காவலராகவும் இருக்கிறீர்கள்” என்று வாழ்த்தினார். அவருடைய வாழ்த்துகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்” என்று சொன்னேன். Red Letter Day supreme Court Stalin

நீண்ட பொதுவாழ்வு அனுபவம் கொண்ட ஆசிரியர் உடனே தனக்கேயுரிய சொல்லாற்றலுடன், “சௌகிதார் என்று பிரதமர் மோடி தன்னைத்தானே சொல்லிக்கொண்டார். ஆனால், நீங்கள்தான் சமூகநீதிக்கும் மாநில உரிமைக்குமான உண்மையான காவலர். மக்களின் காவலர்” என்று பாராட்டினார் தாய்க்கழகத்தின் பாராட்டு எப்போதுமே கூடுதல் உழைப்புக்குத் தெம்பு தரக்கூடியது.
ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம்.

நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் இது தொடரும். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மொழிந்த முழக்கத்தை முன்வைத்து நீதியின் வாயிலாக இந்தியாவின் ஜனநாயகத்தையும் கூட்டாட்சித் தன்மையையும் காத்திடும் பேரியக்கமாக தி.மு.க தன் போராட்டத்தைத் தொடரும்” என கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share