நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் இன்று முதல் 7ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ‘ரெட் அலர்ட்’ காரணமாக, மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்காக தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் இரு மாவட்டங்களுக்கும் விரைந்துள்ளனர்.
