சிரியாவில் ஆட்சியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இருந்து அதிபர் ஆசாத் வெளியேறியதாக ரஷ்யா இன்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இத்லிப், அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் சென்றன. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி ஆயுதமேந்தி முன்னேறிய கிளர்ச்சியாளர்கள் இன்று அதனையும், அங்கிருந்த அதிபர் மாளிகையையும் முழுமையாக கைப்பற்றினர்.
இதற்கிடையே அந்நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத் விமானத்தில் தப்பினார். அவரது விமானத்தின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.

டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதன் மூலம் சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பஷார் அல் அசாத்தின் குடும்ப ஆட்சியையும், சர்வாதிகாரத்தையும் முடிவுக்கு கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிரிய கிளர்ச்சிக் குழுவான ஹையத் தாஹிர் அல் ஷாம் கமாண்டர் அபு முகமது அல்-கோலானி இன்று அரசு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், “எதிர்காலம் நம்முடையது… பின்வாங்குவதற்கு இடமில்லை, நாங்கள் 2011ல் தொடங்கிய பாதையைத் தொடர உறுதியாக இருக்கிறோம். எங்கள் நகரத்தின் சுதந்திரத்தையும் கொடுங்கோலன் அசாத்தின் வீழ்ச்சியையும் நாங்கள் அறிவிக்கிறோம்” என தெரிவித்தார்.

இதனை கொண்டாடும் விதமாக பல கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் என பலரும் டமாஸ்கஸில் தெருக்களில் இறங்கி ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அங்குள்ள அதிபர் மாளிகை மற்றும் மத்திய வங்கியில் நுழைந்து கிளர்ச்சியாளர்கள் சூறையாடி வருகின்றனர்.

அதிபர் பஷார் அல்-அசாத் சிரியாவை விட்டு வெளியேறியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மேலும் சிரியாவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ரஷ்யா அரசு பங்கேற்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பலாத்காரம் : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்