“எடப்பாடி சொல்லும் காரணங்கள்” : நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

Edappadi Palaniswami reason are not acceptable

கொடநாடு வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 8) தெரிவித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி 2019ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டியளிக்க மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ரூ.1.10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பி வைத்தது.

இந்தசூழலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது என்பதால் தனது வீட்டில் சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால், தனக்கான பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக உயர் நீதிமன்றத்துக்கு வரும் போது மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும்.

மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. சட்ட நடைமுறைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற இந்த மனுவை ஏற்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நவம்பர் 7ஆம் தேதி விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,

வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து, எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம் வருவதற்கு விலக்களித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று (டிசம்பர் 8) விசாரணைக்கு வந்தது.

அப்போது எதன் அடிப்படையில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், “காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு காரணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலக்கு கேட்கப்படுகிறது” என கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள், ”உடல் நிலை காரணத்தை தவிர மற்ற காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவாக வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மழையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: டிவிஎஸ் நிறுவனம்!

’கலைஞர்‌ 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

IPL2024: வெயிட்ட கொறைக்க சொல்லுங்க ஐபிஎல்க்கு எடுத்துக்கிறேன்… யாரை சொன்னாரு தோனி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share