விஜய் கட்சிக்கு தாவியது ஏன்? நாஞ்சில் சம்பத் அடுக்கும் காரணங்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Reason why Nanjil Sampath joined the TVK party

திமுக நடத்திய அறிவுத்திருவிழாவிற்கு அழைக்கவில்லை, கரு.பழனியப்பன் நக்கல் செய்தார் என தவெகவில் இணைந்ததற்கான காரணங்களை நாஞ்சில் சம்பத் பட்டியலிட்டுள்ளார்.

பனையூரில் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (டிசம்பர் 5)தன்னை இணைத்துக்கொண்ட நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர் பேசுகையில்,”தமிழக வெற்றிக் கழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர் தம்பி விஜய் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து நீயும் முதல்வராகலாம் என்ற புத்தகத்தை கொடுத்து தவெகவில் இன்று என்னை இணைத்துக் கொண்டேன். ஆறு ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளர் என்று சொல்லி பெரியார், அண்ணா லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் என்னை இணைத்து கொண்டு நாடு முழுவதும் தவெகவின் பிரச்சாரகனாக பவனி வர விஜய் என்னை அனுமதித்து இருக்கிறார்.

என்னைப் பார்த்து விஜய் நான் உங்கள் ஃபேன் என்று சொன்னார். அந்த நிமிடத்தில் நான் மெய் சிலிர்த்து போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை தம்பி தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை .

ADVERTISEMENT

டெல்லி சுப்ரீம் கோர்ட் கரூர் துயரத்திற்கு சிபிஐ விசாரணை என்று உத்தரவு போட்ட அன்று இணையதளம் ஒன்றிற்கு அலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், இது தவெகவிற்கு கிடைத்த வெற்றி.. கையறு நிலையில் கைவிடப்பட்டு, கை பிசைந்து, கண்ணீரோடும், கவலையோடும் இருக்கும் தவெக அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் தவெகவிற்கு ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது என்று நான் தெரிவித்தேன்.

அந்த நிமிடத்தில் இருந்து அறிவாலயத்தில் இருந்து எனக்கு காது கொடுத்து கேட்க முடியாத வசைச்சொற்களால் என்னை வசை மாறி பொழிந்தார்கள்.

ADVERTISEMENT

நான் தொடர்ந்து 5 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திற்கு ஒத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத் திருவிழா என்ற பெயரில் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூல் வெளியீட்டு விழாவும் 44 சொற்பொழிவாளர்கள் கலந்து கொண்ட 10 அமர்வும் நடந்தது. ஒரு சொற்பொழிவாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாலும் முதல் இடத்தில் நிற்கும் தகுதி இருப்பவன் இந்த எளியவன் நாஞ்சில் சம்பத். என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள்.

அதற்குப் பின் உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஒரு திங்களுக்கு முன்னரே என்னிடத்தில் தேதி பெற்றிருந்தார் வட சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தின் செயலாளர் வானளவு வாஞ்சையை என் மீது பொழிகின்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. அந்த நிகழ்வில் கடந்த 28ஆம் தேதி நான் பேசினேன். அந்த நிகழ்வில் அண்ணன் ஜெகத்ரட்சகன், இயக்குநர் கரு பழனியப்பன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்விலேயே கரு.பழனியப்பன் என்னை நக்கல், நையாண்டி செய்தார். அதற்கு ஐந்து நாட்களுக்கு முன் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் நான் பெரிதும் மதிக்கும் பேராசிரியர் சுப வீ திமுக மேடையிலேயே என்னை குறைத்து பேசினார். நான் மனதளவில் உடைந்து போனேன்.

ஏன் இப்படி வசை பாடுகிறார்கள். நான் அவர்களிடத்தில் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் ஒரு சைக்கிள் கூட தர மாட்டார்கள். எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடத்தில் போய் நிற்பதும் இல்லை. ஏதோ நான்கு கூட்டங்களில் பேசி எனது நாட்களை நகர்த்தலாம் என்று பார்த்தால் என்னுடைய வயிற்றில் அடிப்பது போல் என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்தது எனக்கு மிகுந்த வலியை தந்தது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் சரியான திசையில் பயணிக்கிறாரா? என்ற தலைப்பில் பேசுவதற்கு என்னை அழைத்த போது விஜய் சரியான திசையில் பயணிக்கிறார் என்று நான் உரையாற்றினேன்.

அந்த நாளில் இருந்து எனக்கு நெருக்கடியும், வசையும், மிரட்டலும் அதிகமாகவே வந்து கொண்டிருந்தது. இதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் வருத்தமும் இல்லை என்றவர் சங்க இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனாரின் நீர்வழிப் படூஉம் பாடலை மேற்கோள்காட்டி, தான் எந்த திசைக்கு போக வேண்டும் என்பதை தெப்பம் தீர்மானிக்க முடியாது. தண்ணீர் தான் தீர்மானிக்கும். அதே போல் இன்றைக்கு எனது திசையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தம்பி விஜய் தீர்மானித்திருக்கிறார்.

நான் தவெகவில் என்னை இணைத்துக் கொண்டேன் ஒரு உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள் காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். விஜய்யை சந்தித்த பொன் வேளையில் இருந்து புதிதாய் பிறந்தவனைப் போல நான் பூரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share