இந்தியா-பாரத்… பெயர் மாற்றத்துக்குக் காரணம் அரசியல்தான்: கனிமொழி

Published On:

| By Jegadeesh

Reason for the name change of Bharat was politics - Kanimozhi

பாரத குடியரசுத் தலைவர் என்பதும், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்

வானவில் அறக்கட்டளை, சமூகச் செயல்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் (ROSA), நாடோடி இனத்தவர் & பழங்குடிகள் தன்மேம்பாட்டு மையம் (TENT) ஆகியோரின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் நரிக்குறவர், பூம்பூம் மாட்டுக்காரர் -ஆதியன், லம்படா, காட்டுநாயக்கர் ஆகிய நான்கு நாடோடிப் பழங்குடியினரிடையே விரிவான பங்கேற்பு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை இன்று (செப்டம்பர் 6) திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை எழுப்பூரில் வெளியிட்டு பேசினார்.

அப்போது, “நாடோடிப் பழங்குடிகளுக்கான ஆய்வு என்பது மிக முக்கியமான ஆய்வு.

தமிழ்நாட்டில் உள்ள இந்த இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் மாவட்டத்துக்கு மாவட்டம், தாலுகாவுக்கு தாலுகா மாறுதல் இருக்கிறது.

இதனால் கல்வி பயில்வதில் குடும்ப அட்டை, பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் தரப்பட்டு குறைகள் களையப்படும்” என்றார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு இருப்பதாகக் கூறுவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுமே அதில் உள்ளன. மேடைகளில் பேசுகிறவர்கள்கூட இந்த இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகிற சூழல்தான் இருந்து வருகிறது.

ஆனால், எப்போதுமே பாரதப் பிரதமர் என்பதைவிட, Prime Minister of India என்றுதான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்படும். அதேபோல, President of India தான்.

திடீரென்று, தேவையில்லாமல் புதிதாக ஒரு சர்ச்சையை ஏற்படுத்துகிற வகையில், பாரத குடியரசுத் தலைவர் என்பது, இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.

அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம்.

இந்தியா என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தளத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கியிருக்கும் போது, அந்தப் பெயரே ஒன்றிய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலில்தான் பெயரையே மாற்றியுள்ளனர்.

வரலாற்றை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது எனத்தொடங்கி, சட்டங்களுக்குக்கூட இந்தியில் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் அவர்களுக்கு இதுபோல மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம்.

எத்தனையோ விஷயங்களில் மனதை புண்படுத்திவிட்டதாக கூறும் அவர்கள், இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் மீது எஃப்.ஐ.ஆர்!

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?

சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன செய்தது?: சீமான்

மூன்றாவது முறையாக தேவஸ்தான குழு தலைவர் : தமிழக பக்தர்களுக்கு சேகர் ரெட்டி வெளியிட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share