மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 233 சீட்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மத்திய, மாநில அரசுகளின் மீது அதிருப்தியில் இருந்தவர்களும் ஆளும் மகாயுதி கூட்டணிக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்பது லோக்நீதி – சிஎஸ்டிஎஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடந்த கருத்து கணிப்பில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்தது. முடிவில் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக 132, ஷிண்டேவின் சிவ சேனா 57, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 சீட்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் கூட்டணியால் 50 சீட்களில் தான் வெற்றி பெற முடிந்தது. அதிலும் காங்கிரஸ் கட்சி 16 சீட்களில் தான் வெற்றி பெற்றுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி இல்லாமல் மகாராஷ்டிரா சட்டமன்றம் உருவாகவுள்ளது.
ஏன் என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு மொத்தமுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தது 10 சதவீத சீட்களையாவது ஒரு கட்சி வென்றால்தான், அது எதிர்க்கட்சியாக கருதப்படும்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தம் 288 சீட்கள் உள்ளன. எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தது 29 (10%) சீட்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா வென்ற சீட்களே 20 தான்.
இந்த நிலையில், லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் என்ற ஆய்வு நிறுவனம் மகாராஷ்டிரா மக்களிடம் நடத்திய ஆய்வு, ‘மகாயுதி’ வென்றதற்கான சில காரணிகளை நமக்கு எடுத்து காட்டுகிறது.
மாநில அரசு மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளால் எந்த அளவுக்கு திருப்தி உள்ளது என்ற கேள்விக்கு, ஏறத்தாழ 50 சதவீத மக்கள் இரண்டு அரசாங்கங்களின் செயல்பாடுகள் மீது முழு திருப்தி அல்லது ஓரளவுக்குத் திருப்தி உள்ளதாக கூறியிருக்கிறார்கள். இது ‘மகாயுதி’ வெற்றிபெற்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மாநிலத்தில் சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு குடிநீர் விநியோகம் சிறிது மேம்பட்டுள்ளது ( 42% மக்கள்). ஆனால், மற்ற பிரச்சனைகள் அனைத்தும் அதே நிலையில் தான் நீடிக்கிறது என்று ஏறத்தாழ 40%-க்கும் அதிகமான மக்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், இவர்களின் வாக்குகளையும் ‘மகாயுதி’ கூட்டணிதான் பெற்றுள்ளாரக்ள் என்பதை அவர்களது வெற்றி காட்டுகிறது.
ஊழல்
ஊழல் குறித்த கேள்விக்கு, 34 சதவீத மக்கள் ஊழல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் 43% மக்கள் ‘மகா விகாஸ் அகாதிக்கு’ வாக்களித்துள்ளார்கள். ஆனால், ஊழல் அதிகரிக்கவும் இல்லை, அதேவேளை குறையவும் இல்லை என்று கருத்து தெரிவித்த 38% மக்களில் 53% பேர் ‘மகாயுதிக்கு’ வாக்களித்திருக்கிறார்கள்.

குஜராத்திற்கு போன தொழிற்சாலைகள்
தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி பாஜக-வின் பாகுபாடான நடவடிக்கையினால், பெரும்பாலான தொழிற்சாலைகள் குஜராத்திற்கு சென்று விட்டன என்று பல முறை கூறியது.
ஆனால் 50% மக்களுக்கு இந்த செய்தி போய் சேரவில்லை என்று லோக்நீதியின் ஆய்வு கூறுகிறது. மேலும் கிட்டத்தட்ட 60 % மக்கள் இதற்கு மாகாயுதியும் மத்தியில் ஆளும் பாஜகவும்தான் காரணம் என்று கூறியிருந்தாலும், அது காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் கூட்டணிக்கு’ சாதகமாக முடியவில்லை என்று தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது.

–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இரட்டை இலை வழக்கில் ஒரு வாரத்தில் உத்தரவு!
All We Imagine As Light : விமர்சனம்!
ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!
