எதையும் சந்திக்க தயார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

Published On:

| By Kavi

ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து திமுக பூத் ஏஜெண்ட்டுகளுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் இன்று (ஜூன் 1) நிறைவடைகிறது. 57 தொகுதிகளில் இன்று 7ஆம் கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது.

முடிவுகள் இன்னும் 3 தினங்களில் வெளியாகவுள்ளது. அடுத்து ஆட்சி அமைப்பது எந்த கூட்டணி, அடுத்த பிரதமர் யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.  இந்த கூட்டத்தில் திமுக சார்பில்  எம்.பி.டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.

மறுபக்கம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில், சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், காணொளி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்துகொண்ட பூத் ஏஜெண்டுகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “பிரதமரின் தொகுதியான வாரணாசியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சார நேரம் முடிந்த பிறகு அங்கிருந்து இங்கு பறந்து வந்து தியானம் செய்வதை போல, டிவியிலும் பத்திரிகைகளிலும் தெரிகிற வகையில் தியானம் செய்கிறார். இதுவரை எந்த ஜனநாயக நாட்டிலும் இப்படி நடந்தது கிடையாது. இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. 40/40 திமுக கூட்டணி வெற்றி பெற போகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஒருமணி நேரம் வகுப்பு நடத்தினார்.

முகவர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் செல்போனிலும் தொடர்புகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். 4ஆம் தேதி வெற்றி திமுக கூட்டணிக்குதான்.

வாக்குப்பதிவு மையங்களில் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. உழைப்பு வீண் போகக் கூடாது என்று தேர்தலின் போது கலைஞர் அன்றைக்கு கடிதம் எழுதுவார். அதுபோலதான் இன்று நாங்கள் செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

இந்தியா கூட்டணி கூட்டம்… – ஸ்டாலின் வெளியிட்ட மெசேஜ்!

புனே சொகுசு கார் விபத்து: சிறுவனின் தாயார் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share