நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 1) அவர் நடித்த தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திரையுலக பிரபலங்களும் அஜித் பிறந்தநாள் தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனிடையே ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முழுவதும் வழங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இந்த படங்கள் வெளியாகியுள்ள நிலையில், காலை முதல் அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் வீடியோ, புகைப்படமாக பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/Kuruviyaaroffl/status/1785604307796304341
இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் வழக்கம்போல ரசிகர்கள் தீனா படத்தை கொண்டாடினர். அப்போது தியேட்டருக்குள் சிலர் பட்டாசு வெடித்தனர்.
குறிப்பாக “வத்திக்குச்சி பத்திக்காது” பாடலின்போது பட்டாசு வெடித்ததால், அங்கிருந்த மற்ற ரசிகர்கள் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் தியேட்டருக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தீனா படம் கடந்த 2001 ஆம் ஆண்டு ரிலீசானது. இப்படத்தின் மூலமாக இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சாக்லேட் பாயாக இருந்த அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது “தீனா” திரைப்படம் தான். இந்த படத்தின் மூலம் தான் அஜித்தை “தல” என அனைவரும் அழைக்க தொடங்கினர்.
தீனா திரைப்படத்தில் லைலா, சுரேஷ்கோபி, மகாநதி ஷங்கர் என பலர் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…