RCB vs MI : மும்பை அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. rcb register victory after 10 years at wankade
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 8) இரவு நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
மும்பை அணியில் பல நாட்களுக்கு பிறகு இணைந்தார் அந்த அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா. இதனால் 2வது வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தனர் மும்பை அணியின் ரசிகர்கள்.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 67 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டித்தார் 64 ரன்களும், ஜிதேஷ் சர்மா 40 ரன்களும் குவித்தனர்.
மும்பை அணி தரப்பில் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசிய போதிலும், போல்ட் (57-4) மற்றும் சஹார் (29-2) ரன்களை வாரி வழங்கினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா(17) வழக்கம்போல ஏமாற்றினார். அவரைத் தொடர்ந்து ரிக்கில்டன் (17), வில் ஜாக்ஸ் (22), சூர்யகுமார் யாதவ் (28) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
100 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்த நிலையில் ஆர்சிபி எப்படியும் வென்று விடும் என்ற நிலை இருந்தது.
ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா முதல் 7 பந்துகளில் 36 ரன்களை அதிரடியாக குவித்தார். மற்றொரு பக்கம் தனது அதிரடியைக் காட்டி வந்த திலக் வர்மா அரைசதம் அடித்தார்.
இதனால் மேட்ச் கையை விட்டு போய்விடும் என்ற நிலையில் பரிதவித்தது பெங்களூரு அணி.
இந்த நிலையில் வெற்றிபெற 18 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வரின் ஸ்லோ பந்தில் ஆட்டமிழந்தார் திலக் வர்மா (56). அதற்கு அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியாவும் (42) ஆட்டமிழக்க மும்பையின் வெற்றி சிக்கலானது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட, குருணால் பாண்டியா பந்துவீசினார். அவர் மூன்று விக்கெட்டுகளுடன் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஆர்.சி.பி அணி.
இதன்மூலம் மும்பை வான்கடே மைதானத்தில் தொடர் தோல்விகளை தழுவி வந்த ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்கு த்ரில் வெற்றியை பெற்றது.