’ஊடக வெளிச்சத்துக்காக பேசி வரும் டிடிவி தினகரன் ஒரு காலாவதியான அரசியல்வாதி’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வரும் அக்டோபர் 30-ம் தேதி காலை 10 மணிக்கு சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
அவரது வருகையையொட்டி தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் இன்று (அக்டோபர் 25) மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “டிடிவி தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். ஊடக வெளிச்சத்துக்காக டிடிவி தினகரன் எடப்பாடி குறித்து விமர்சனம் செய்கிறார்.
டிடிவி தினகரன் மக்கள் பணியில் கவனம் செலுத்தி பேச வேண்டும். அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்.
டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து வீணாகியுள்ளது. லட்சக்கணக்கான டன் நெல் ரோட்டில் கிடக்கிறது.
டெல்டா விவசாயிகளுக்காக எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்ததால் மத்திய ஆய்வு குழு இன்று நேரில் ஆய்வு செல்கிறது. இந்த காலாவதியான அரசியல்வாதியை பற்றி யாரும் பேச வேண்டாம்.
டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது. டெல்டா விவசாயிகள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர்” என விமர்சித்தார்.
முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில், “டிடிவி தினகரனின் சுயநலத்தின் உண்மை முகம் இப்போது வெளிச்சமாகியுள்ளது. எப்போது ஒருவர் தி.மு.க.வையும், முதல்வர் மு.க. ஸ்டாலினையும் பாராட்டிப் புகழ்ந்து பேசுகிறாரோ, அப்போதே அவர் அதிமுகவைப் பற்றிக் பேசும் தகுதியை இழந்து விடுகிறார் என ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.
