எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவம் எடப்பாடி… செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்!

Published On:

| By Selvam

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (பிப்ரவரி 13) தெரிவித்துள்ளார். udhayakumar criticised sengottaiyan indirectly

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இதனையடுத்து நேற்று (பிப்ரவரி 12) ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “நான் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செல்கிறேன். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பற்றி செங்கோட்டையன் எதுவும் பேசவில்லை. மேலும், விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் புகைப்படங்கள் சம அளவில் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “அதிமுக சோதனைகளை சந்திக்கலாம். அதை சோதனையாக கருதாமல் அதிமுக தொண்டர்களின் மன வலிமைக்கு வலு சேர்க்கிற சந்தர்ப்பமாக தான் நாம் பார்க்க வேண்டும். ஆகவே, இன்றைக்கு எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது. அதனால் அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது.

ஏனென்றால் இது மக்களால் பாதுகாக்கப்படுகின்ற இயக்கம். மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த ஒரு தியாக வேள்வியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் தலைமை தாங்கி மேற்கொண்டிருக்கிற இந்த தியாக வேள்விக்கு அம்மா பேரவை நாளை முதல் களம் காண இருக்கிறது.

இது சோதனைகள் என்று யாரும் சோர்ந்து விட வேண்டாம். நாம் ஒற்றுமையாக களம் காணவேண்டிய தருணம் இது. மக்கள் விரோத திமுக அரசுக்கு நாம் முடிவுகட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். udhayakumar criticised sengottaiyan indirectly

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share