கிச்சன் கீர்த்தனா: மாங்காய் – வேப்பம்பூப் பச்சடி

Published On:

| By admin

சித்திரை மாதத்தில் கோடைத்தரும் கொடைகள் மாங்காயும் வேப்பம்பூவும். பல தலைமுறைகள் கடந்தாலும் தமிழர்களின் பண்பாடு தனித்துவம் வாய்ந்தது. நம் முன்னோர் கொடையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே உணவு சமைத்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பதும் கடத்துவதும் நம் கடமை. சித்திரை மாதம் முதல் நாளில் மதிய உணவில் வேப்பம்பூ மற்றும் மாங்காய்ப் பச்சடி செய்வது வழக்கம். அதை நீங்களும் செய்து ருசிக்கலாம்.

என்ன தேவை?

  • மாங்காய் – ஒன்று
  • மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
  • வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன்
  • நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காயைத் தோல் சீவி மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மாங்காய் வெந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் துருவிய வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்து மாங்காயுடன் சேர்ந்து கெட்டியாகி பச்சடிப் பதம் வந்த பின் அடுப்பை அணைத்து விடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து‌ காய்ந்த வேப்பம்பூவைச் சேர்த்து கருகாமல் வறுத்து பச்சடியில் கலந்து கொள்ளவும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share