ரோஹித் சர்மா, விராட் கோலியை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது.
இந்த போட்டி நிறைவடைந்ததும் இந்திய அணியின் தூண்களான கேப்டன் ரோஹித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் விராட்கோலி இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். வெற்றிக் களிப்பில் இருந்த இந்திய அணி ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சோகத்தையே கொடுத்தது. ரோஹித், கோலி வரிசையில் தற்போது ஜடேஜாவும், ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதயம் நிறைந்த நன்றியுடன் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். எனது நாட்டிற்காக என்னால் முடிந்த பங்களிப்பை செய்தேன். இனியும் மற்ற வடிவ போட்டிகளில் அதனை தொடர்ந்து செய்வேன்.
டி20 உலக கோப்பையை வென்றதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. இந்திய ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி: திமுக Vs பாமக மோதல்… தேர்தல் அதிகாரியை மாற்ற அன்புமணி வலியுறுத்தல்!