கடந்த 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,534 மகளிர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு மற்றும் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகேல், “தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு மத்திய அரசு உதவிகள் வழங்கி வருகிறது. அதனடிப்படையில் 60:40 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்றா நோய்களுக்கு 753 மாவட்டங்களில் கிளினிக்குகளும், 6,237 சமூக சுகாதார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் திட்டத்தின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்று, மார்பகம் மற்றும் வாய்வழி புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்ட அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,42,333 மகளிர் கருப்பை வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2014- 2023 வரை தமிழகத்தில் 36,014 மகளிரும், உத்தரப் பிரதேசத்தில் 45,682 பேரும் மகாராஷ்டிராவில் 30,414 பேரும், மேற்கு வங்கத்தில் 25,822 பேரும் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்”, என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 4-ம் தேதியான இன்று புற்றுநோய் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்க்கு தேர்தல் ஆணையம் உதவியதா? டெல்லியில் நடந்தது என்ன?
நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டி: மதிமுக உறுதி!