ஓய்வை அறிவித்த சுழல் புயல் அஸ்வின்… ரசிகர்கள் ஷாக்!

Published On:

| By Selvam

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று (டிசம்பர் 18) ஓய்வை அறிவித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடினார். இந்த போட்டியில் அவரது அபாரமான சுழல் பந்துவீச்சை அடையாளம் கண்ட பிசிசிஐ, அதே ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அஸ்வினை களமிறக்கியது.

தொடர்ந்து டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அஸ்வின், சுழல் பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாமல் உள்ளூர் அளவில் நடைபெறும் டி.என்.பி.எல் போட்டிகளில் பங்கேற்று பல இளம் வீரர்களுக்கு ஊக்கமளித்தார்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வின் 7-ஆவது இடத்தில் இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கபா மைதானத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக, டிராவில் முடிந்தது.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், ” இந்திய வீரராக சர்வதேச அளவில் அனைத்து வடிவங்களிலான போட்டியில் இதுவே என் கடைசி நாள் போட்டி” என்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். அஸ்வினின் ஓய்வு குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் ஓய்வு குறித்து பேசியுள்ள கேப்டன் ரோகித் ஷர்மா, “சில முடிவுகள் என்பவை மிகவும் தனிப்பட்டவை. நாம் அந்த முடிவுகளில் அதிக கேள்விகள் கேட்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக எங்களுடன் விளையாடிய அஸ்வினின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்காக இந்திய அணி எப்போதும் பக்கபலமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொன் மகளான ஆட்டோ ஓட்டுநர் மகள்.. கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியாவின் இடம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share