ஹிண்டன்பர்க் அறிக்கை: பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் டார்கெட்… பாஜக குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தியாவில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உடைக்க சதி செய்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் இன்று (ஆகஸ்ட் 12) குற்றம் சாட்டியுள்ளார்.

அதானிக்கு சொந்தமான முறைகேடு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள கட்டுரை தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உடைக்க சதி செய்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை திட்டமிட்டு வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையால் இன்று பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை, பாதுகாப்பான, நிலையான மற்றும் நம்பிக்கைக்குரிய சந்தையாக உள்ளது.

பங்குச்சந்தை சீராக இயங்குவதை உறுதிசெய்வது செபியின் சட்டப்பூர்வமான பொறுப்பாகும். ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டிஸுக்கு எந்த பதிலும் அளிக்காமல் தற்போது செபியின் தலைவர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இன்று முக்கியமான சில பிரச்சனைகளை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம். யாருடைய முதலீட்டில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இயங்குகிறது. இந்த நபர் ஜார்ஜ் சிரோசர்ஸ் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தான் ஹிண்டன்பர்க் நிறுவனத்தில் முதலீட்டாளராக இருக்கிறார்.

மோடிக்கு எதிரான வெறுப்புணர்ச்சி காரணமாக, காங்கிரஸ் கட்சி இன்று இந்தியா மீது வெறுப்பை வளர்த்துள்ளது. இந்திய பங்குச்சந்தை நிலைகுலைந்தால், சிறு முதலீட்டாளர்கள் சிரமப்படுவார்களா இல்லையா?

பங்குச் சந்தையையும் அழிக்க நினைக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புவதை தடுக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பங்குச்சந்தையில் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை என்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய நான்கு மாநகராட்சிகள்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்: வெளியிட வரும் ராஜ்நாத் சிங்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share