நான் யார் என எனக்கு உணர வைத்தது கெனிஷா தான். எனது புதியா ஸ்டூடியோவில் அவரும் ஒரு பார்ட்னர் என ரவிமோகன் பேசியுள்ளார்.
விவாகரத்து பிரச்சினை, வீடு ஜப்தி எனப் பல சர்ச்சைகளுக்கிடையே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ரவி மோகன் ஸ்டூடியோ’ என தனது பெயரிலேயே புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நடிகர் ரவிமோகன்.
சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 26) நடந்த நிறுவனத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகியோரும், நடிகைகள் ஜெனிலியா, அவரது கணவர் தேஷ்முக், ஸ்ரத்தாஸ்ரீநாத், மாளவிகா மனோஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவிற்கு ரவி மோகனின் சகோதரர் ராஜா மோகன், அவருடைய தாய் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், ரவிமோகன் மற்றும் அவரது காதலி கெனிஷா இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றது பலரின் கவனத்தை ஈர்த்தது.
விழாவில் ரவி மோகன் பேசுகையில், “ஒரு மனுஷனுக்கு தேவைப்படுகிற நேரத்தில் உதவுகிற சில பேர் வாழ்க்கையில் இருப்பாங்க. அப்படி எனக்காக வந்தவங்க தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொருவரும். உங்கள் அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பேன். சிரித்துக்கொண்டே இருப்பது தானே ஒரே பாசிட்டிவிட்டி.

என்னை பற்றி நிறைய நெகட்டிவ் நியூஸ், சொத்துகள் முடக்கம் என நிறைய செய்திகள் வந்துச்சி. நானும் போய் பாத்தேன். அப்படி ஒன்னுமே இல்ல. ஏனென்றால் என்னுடைய சொத்துகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் நீங்கள் தான். இந்த சொத்துகளை யாரையும் முடக்க முடியாது.
எனக்கு இந்த நிகழ்ச்சி எப்படி நடக்குமென்று தெரியாது. ஆனால் நீங்கள் அனைவரும் என்னை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதை இதன்மூலம் புரிந்துகொண்டேன். இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் கெனிஷா மட்டும் தான். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் ரவி மோகன் ஸ்டூடியோவின் பார்ட்னர். நான் யார் என எனக்கு உணர வைத்தது கெனிஷா தான்” என ரவி தெரிவித்தார்.

தனது புதிய நிறுவனத்தை தொடங்குவதை முன்னிட்டு, ரவி மற்றும் கெனிஷா இருவரும் நேற்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வழிப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியானது.
அதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நீங்கள் பிறரை முட்டாளாக்கலாம். உங்களையே நீங்கள் முட்டாளாக்கிக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் கடவுளை முட்டாளாக்க முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவரையும், நிகழ்ச்சிக்கு அழைத்து வராமல் தவிர்த்தவர்களையும் மறைமுகமாக குறிப்பிடும் வகையில், ”என்னை வாழ்த்த வேண்டும் என்று இங்கே சிலர் வந்திருக்கின்றனர். என்னை வாழ்த்த வேண்டாம் என சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். நான் இங்கே தான் இருப்பேன். வளர்ந்துக்கிட்டே தான் இருப்பேன்” என ரவி மோகன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
