தனது முதல் மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கோரி, நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நடிகர் ரவி மோகன், சமீப காலமாக பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நிகழ்ச்சிகளில் வலம் வருகிறார்.
இதனையடுத்து ஜெயம் ரவி மற்றும் கெனிஷாவை கண்டித்து ஆர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் ”இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு செவிசாய்த்து தான் ஆக வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நடிகர் ரவி மோகன் எக்ஸ் பக்கத்தில் இன்று (மே 15) ஆர்த்தி மற்றும் ஊடகங்களுக்கு தனது பதிலை 4 பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இரக்கம் இல்லாமல் வதந்தி பரப்புகிறார்கள்!
அதில் “நமது நாடு ஒரு பெரிய கூட்டு நெருக்கடியை எதிர்கொண்டாலும், நீதிமன்றத்தில் இருக்கும் விவாகரத்து வழக்கு மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் பொதுமக்களால் பேசபடுவது எனக்கு வேதனை அளிக்கிறது.
எனது தனிப்பட்ட வாழ்க்கை வதந்திகளாகவும், உண்மை அல்லது இரக்கம் இல்லாமல் திரிபுபடுத்தப்பட்டதாகவும் மாறுவதைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. எனது மௌனம் ஒரு பலவீனம் அல்ல. ஆனால் எனது பயணத்தையோ அல்லது எனது வடுக்களையோ அறியாதவர்களால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது, நான் பேசிதான் ஆக வேண்டும்.
நான் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் எனது வாழ்க்கையை உருவாக்கினேன். எனது கடந்தகால திருமண உறவுகளில் யாரையும் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது தற்காலிக புகழுக்காகவோ மலிவான அனுதாபத்தை கையாள நான் அனுமதிக்க மாட்டேன். இது விளையாட்டு காரியம் அல்ல. இது எனது வாழ்க்கை.
விவாகரத்து இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல!
சட்டபடியான நடவடிக்கைக்கு நான் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். மேலும் அது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். சட்டத்தை மதிப்பவன் என்ற அடிப்படையில், கண்ணியத்துடன் இதை நான் தொடர்ந்து செய்வேன்.
ஒரு மனிதனாக, பல வருடங்களாக உடல், மன, உணர்ச்சி மற்றும் கடுமையான நிதி துஷ்பிரயோகங்களில் பாதிக்கப்பட்டேன். மேலும் (இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது) இந்த ஆண்டுகளில் என் சொந்த பெற்றோரைச் சந்திக்கக் கூட முடியாத அளவிற்கு நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.
என் திருமணத்தை காப்பாற்ற ஒவ்வொரு உண்மையான முயற்சியும் இருந்தபோதிலும் தாங்க முடியாத ஒரு சுழலில் சிக்கிக்கொண்டேன். இறுதியாக வாழவே முடியாததாக மாறிய ஒரு வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லும் வலிமையைக் கண்டேன்.
விலகிச் செல்வதைத் (விவாகரத்து) தேர்ந்தெடுப்பது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல – எனவே, இதை நான் கனத்த இதயத்துடன் உங்களுக்கு எழுதுகிறேன்.
விவாகரத்து கோரும் எனது முடிவு குறித்து எனது குடும்பத்தினர், எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் என்னைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட எனது அன்பான ரசிகர்களிடம் நான் ஏற்கனவே மனம் திறந்து பேசிவிட்டேன்.
எனது பிரிந்த முன்னாள் மனைவி உட்பட அனைவரின் தனியுரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையான விருப்பத்துடன் நான் அதை தேர்வு செய்தேன். மேலும் அதன் மேல் யூகங்களை அடுக்கவோ அல்லது பழி சுமத்தவோ வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினேன். ஆனால் எனது மௌனம், குற்ற உணர்ச்சியாகத் தவறாகக் கருதப்படுவதாகத் தெரிகிறது.
எனது குணாதிசயத்தை மட்டுமல்ல, சமீபத்திய பொதுத் தோற்றங்களின் அடிப்படையில் ஒரு தந்தையாக எனது பங்கையும் கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் இப்போது பகிரங்கமாக அவதூறு செய்யப்படுவதைக் காண்கிறேன்.
தெளிவாகச் சொல்வதென்றால், இந்த ஜோடிக்கப்பட்ட வதந்திகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். நான் எப்போதும் போல, கண்ணியத்துடனும், விடாமுயற்சியுடனும், நீதியின் மீதான நம்பிக்கையுடனும் என் உண்மையின் பக்கம் தொடர்ந்து நிற்பேன்.
நான் வீட்டை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுத்த நிமிடத்தில் “ex” என்ற சொல் என் இதயத்தில் உருவாக்கப்பட்டது, அது என் இறுதி மூச்சு வரை அப்படியே இருக்கும்.
குழந்தைகளை பவுன்சர்கள் வைத்து தடுக்கிறார்கள்!
நாங்கள் பிரிந்ததிலிருந்து வேண்டுமென்றே, என் குழந்தைகள் என்னிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், நிதி ஆதாயத்திற்காகவும், பொதுமக்களின் அனுதாபத்தைத் தூண்டவும் என் குழந்தைகள் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்ப்பதுதான் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது.
கடந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் அனைத்து தகவல்தொடர்புகளும் படிப்படியாக குறைந்தது. உண்மையில் சொல்வதென்றால் என் சொந்தக் குழந்தைகளைப் பார்ப்பதையோ அல்லது அணுகுவதையோ கூடத் தடுக்க பவுன்சர்கள் இப்போது கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அவர்களுடன் வருகிறார்கள்.
மேலும் நீங்கள் ஒரு தந்தையாக எனது பங்கைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்களா?
எந்த தந்தைக்கும் இந்நிலைமை வரக் கூடாது!
என் குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு மூன்றாம் தரப்பினர் மூலம் மட்டுமே நான் தெரிந்துக்கொண்டேன். அதுவும் ஒரு தந்தையாக அல்ல. கார் பழுதுபார்க்கும் காப்பீட்டிற்கு எனது கையொப்பம் தேவை என்பதால் மட்டுமே தான் அது எனக்கு தெரியவந்தது.
என் குழந்தைகளை பார்க்க எனக்கு இன்னும் அனுமதி இல்லை. என் பிரார்த்தனைகளாலும், அவர்கள் மீதான என் நிபந்தனையற்ற அன்பினாலும், தாங்க முடியாத இந்த குழப்பமான நேரத்தில் கூட எப்போதும் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள் என்று நான் நம்புகிறேன். எந்த தந்தைக்கும் இந்த நிலைமை வரக் கூடாது.
நான் என் முன்னாள் மனைவியையும் குடும்பத்தினரையும் நேசித்து ஆதரித்தேன். ஒரு ஆணாகவும் தந்தையாகவும் நான் விலகிச் செல்ல எடுத்த முடிவின் பலனை அவர்கள் விரைவில் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் வாழ்கிறேன்.
என்னுடைய கடந்த கால வாழ்க்கைப் பற்றிய முழு அறிவும் புரிதலும் உள்ள நிலையில், என் மனைவியை விட்டு மட்டுமே விலக முடிவு செய்தேன். என் குழந்தைகளை அல்ல. என் குழந்தைகள்தான் என் பெருமை மற்றும் மகிழ்ச்சி. எனது இரண்டு பையன்களுக்காக என் வாழ்க்கையாக சிறப்பாக வாழ்வேன்.
காதல் போர்வையில் எல்லாம் பறிக்கப்பட்டது!
உண்மையில் ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க அயராது உழைத்த ஒரு மனிதனுக்கு இதைவிட மனவேதனையைத் தரும் வேறு எதுவும் இல்லை.
என் சொந்த வருவாய் மற்றும் நிதி, என் சொத்துக்களின் பங்குகள், என் சமூக ஊடகக் கணக்குகள், என் தொழில் முடிவுகள், பிணையாளர்களாக பெரும் நிதிக் கடன் என எனக்கு தெரியாமலே நான் பந்தாடப்பட்டேன்.
தந்தை – மகன் பிணைப்பு இல்லாமல் பார்த்து கொள்வது, சுயநலத்துடன் தன்னையும் (ஆர்த்தி), தனது பெற்றோரையும் ஆடம்பரமாக மாற்றும் அதேவேளையில், என் சொந்த பெற்றோரின் அடிப்படை உரிமைகளை கூட வழங்கவில்லை. அதே நேரத்தில் என் சம்பாத்தியத்தில் ஒரு பைசா கூட 5 ஆண்டுகளுக்கும் மேலாக என் பெற்றோருக்கு அனுப்பப்படாமல் பார்த்துக் கொண்டார்.
இதெல்லாம் தெரிந்தும், பிரச்சனையை தவிர்ப்பதற்காக நான் பொறுமையாக இருந்தேன். அதை சகித்துக்கொண்டேன்.
என் மனைவியால் நான் ஒரு கணவனாக அல்ல, ஒரு தங்க வாத்து போல நடத்தப்பட்டேன். என் நிதி, முடிவுகள், சொத்துக்கள், என் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடனான எனது பிணைப்பு கூட காதல் என்ற போர்வையில் என்னிடமிருந்து பறிக்கப்பட்டது” என தனது மனைவி ஆர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் ஜெயம் ரவி.
