தமிழ்த்தாய் வாழ்த்து: எனக்கு எதிராக இனவாத கருத்து… ஸ்டாலினை சாடிய ஆளுநர்

Published On:

| By Selvam

சென்னை சேப்பாக்கம் தூர்தர்ஷன் அலுவலகத்தில் டிடி தமிழ் சேனல் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை தவிர்த்துவிட்டு பாடியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து விளக்கமளித்த டிடி தமிழ் நிர்வாகம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறிவிட்டது என்றும் தெரிவித்தது.

இந்தநிலையில், “ஆளுநரா? ஆரியரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஆளுநர் ரவி, “முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார்.

பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் விடுபட்டது ஏன்? – டிடி தமிழ் விளக்கம்!

விநாயகர் சிலை வைத்த விசிக – விசித்திர சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share