முடங்கிய 5,000 பிரம்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

Published On:

| By Balaji

சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பாரம்பரியமான பிரம்புத் தொழில் முடங்கி உள்ளதால் சுமார் 5,000 பேர் வேலை இழப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாகப் பாரம்பரிய பிரம்புப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசைத் தொழிலாகத் தொடங்கிய பிரம்புப் பொருள்களின் தயாரிப்பு தற்போது சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமத்தில் சாலையின் இருபுறமும் இரண்டு கி.மீ தூரத்துக்கு 200-க்கும் மேற்பட்ட உற்பத்திக்கூடங்களும், விற்பனையகங்களும் இயங்கி வருகின்றன.

ADVERTISEMENT

இங்கு தயாரிக்கப்படும் பிரம்புப் பொருட்கள் புவிசார் குறியீடு பெறும் அளவுக்கு பாரம்பரியமும் தரமும் வாய்ந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பிரம்பால் செய்யப்பட்ட நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில் மற்றும் மிகுந்த கலைநயம்மிக்க கைவினைப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், பெரம்பூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

தற்போதைய கொரோனா ஊரடங்கால் தைக்கால் பிரம்புப் பொருட்கள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது. இதனால் இத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த சுமார் 5,000 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பேசிய தொழிலாளர்கள், “கடந்த ஆண்டு கொரோனாவால் உற்பத்தி செய்த பொருட்களை முழுமையாக விற்பனை செய்ய முடியவில்லை. தற்போதைய ஊரடங்கு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எங்களுக்கு இந்தத் தொழிலைத் தவிர வேற வேலை தெரியாது. சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணிகளே அதிகம் பிரம்புப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

ADVERTISEMENT

கடந்த கொரோனா அலையின் தாக்கம் குறைந்து சுற்றுலாவும் ஆன்மிகத் தலங்களும் முழு பயன்பாட்டுக்கு வராத நிலையில், இரண்டாம் அலையால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கிராமத்தில் இருபுறமும் பிரம்புப் பொருட்கள் போர்த்தியது போல் காட்சியளித்த தைக்கால் கிராமம் தற்போதை ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கிறது. எனவே எங்களுக்கு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share