மறுமலர்ச்சி படத்தை ‘ஞாபகப்படுத்தும்’ கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ்

Published On:

| By Minnambalam Desk

29 Movie Title and Teaser Released

இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரிக்க, மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் 29.

29ஆவது வயதுதான் ஒரு மனிதனுக்கு முக்கியமான வயது. தன்னை உணரும் வயது என்ற கருத்தில் வரும் படம் இது.

ADVERTISEMENT

படத்தின் நாயகனாக கார்த்திக் சுப்புராஜின் உறவினர் விது நடிக்கிறார்.

இயக்குனர் ரத்னகுமார் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர். அவரது படங்களுக்கு எழுதுபவர் எனவே தனது உறவினருக்காக கார்த்திக் சுப்புராஜும் தனக்கு எழுத்தில் உதவிய ரத்னகுமாருக்காக லோகேஷ் கனகராஜும் சேர்ந்து தயாரிக்கும் படம் இது. தப்பில்ல. நல்ல விஷயம்தான்.

ADVERTISEMENT

படத்தின் அறிமுக விழாவில் பேசிய ரத்னகுமார் லோகேஷ் கனகராஜ் பற்றி, ” இந்த விழாவுக்கு அவனை (லோகேஷ் கனகராஜ்) வரச் சொன்னேன். வரல. ஷூட்டிங்ல இருக்கான். சரி ஒரு வாழ்த்துக் கடிதமாவது எழுதி அனுப்புவான்னு பார்த்தேன் அனுப்பல. அவன் படத்துக்கே அவன் (ஸ்கிரிப்ட்) எழுத மாட்டான்.” என்றது கலகல.

29 Movie Title and Teaser Released

படத்தின் டீசர் ஒன்றை திரையிட்டார்கள்.

ADVERTISEMENT

அதில் ஒரு பெண் குரல் சாலையில் போகும் ஒவ்வொருவரையும் பார்த்து சில கேள்விகள் கேட்கிறது.

நீங்க யாரு?

கணேஷ்

அது உங்க பேரு? நீங்க யாரு?

சங்கர் மகன்

அது உங்க அப்பா பேரு?

நீங்க யாரு?

திருச்சிக்காரன்

அது உங்க ஊரு? நீங்க யாரு?

சாஃப்ட் வேர் என்ஜினீயர்

அது உங்க வேலை. நீங்க யாரு?

என்பது போல ஒவ்வொருவரையும் கேட்க அவர்கள் அதிர்ச்சி அடைந்தோ கோபப்பட்டோ நிற்க, ஒருவர் மட்டும் நீங்க யாரு என்ற கேள்விக்கு தெரியல என்று சொல்கிறார். அப்புறம் அவர் கண்ணாடி முன் நின்று அழுகிறார். அவருக்கு வயது 29 என்பதுதான் அந்த டீசரின் உள்ளடக்கம்.

இதே விஷயத்தை அப்படி வைத்து தெலுங்கிலும் “எவுரு மீரு?” , ” அதி மீரு பேரெனா ? மீரு எவுரு ?” என்று ஒரு டீசர் வருகிறது.

அது பற்றிப் பேசிய ரத்னகுமார், ” 29 வயசுல நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன். அப்போ தான் இந்த, ‘நான் யாரு?’ என்ற கேள்வி வந்தது. அதில் இருந்து இந்தக் கதையை உருவாக்கினேன் ” என்றார் .

நாயகி பிரீத்தி அஸ்ராணி வேறு, ” அந்தக் கேள்வி பிரம்மாதமானது. அந்த ஐடியா அற்புதமானது. உண்மையில் இயக்குனர் ரத்னகுமார் ஜீனியஸ் என்றார்.

ரைட்டு…

மம்முட்டி தேவயானி நடிப்பில் இயக்குனர் பாரதி எழுதி இயக்கி,1998 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் மறுமலர்ச்சி.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களில் ஒன்று. திரைப்படக் கல்லூரியில் பாடமாக இருக்கும் அந்தப் படம் தமிழக அரசின் சிறந்த படம், சிறந்த வில்லன் (ரஞ்சித்), சிறந்த வசனம் என்று மூன்று விருதுகளைப் பெற்ற படம்.

ஒரு ஊரில் சிலை வைக்கப்பட்டு தெய்வமாக வழிபடப்படும் ஒரு தலை சிறந்த மனிதனை, அவன் யாரென்று தெரியாமல் இன்னொரு ஊரில் ஒரு பெண்ணிடம் வரம்பு மீறினான் என்று தவறாக நம்பி சந்தையில் தூணில் கட்டி வைத்து அடித்து விடுவார்கள்.

அந்த மனிதனின் ஊருக்கு அந்த விஷயம் தெரிய, அந்த ஊரே அதிர்ந்து உடைந்து கலங்கிக் கதறி மாரடித்து பின்னர் கோபப்படும். என்ன நடந்தது என்பதே படம் (உண்மையான திறமைசாலிகளுக்கு வாய்ப்புக் கிடைத்த பொற்காலம் அது.)

அந்தப் படத்தில் மம்முட்டியைப் புகழ்ந்து பாடும் ஒரு கூத்தாடிக்கும் மம்முட்டிக்கு நடக்கும் ஓர் உரையாடல்.

“கும்பிடறேன் சாமி”

“நான் சாமி இல்ல மனுஷன், நீ யாரு?”

“கூத்தாடிங்க.”

“நீ பண்ற தொழிலைக் கேட்கல நீ யாருன்னு கேட்டேன்”

“சொக்கானோட… “(மவன் என்று சொல்ல வர)

“உன் அப்பன் பேரைக் கேட்கல. நீ யாருன்னுதான் கேட்டேன். புரியல?. நீயும் மனுஷன் நானும் மனுஷன். மனுஷன மனுஷன் ஏன்யா இப்படி புகழறீங்க.?”

மறுமலர்ச்சி படத்துக்கு தமிழக அரசின் சிறந்த வசனத்துக்கான பரிசு கிடைத்ததும் இந்த வசனத்துக்குத்தான்.

அப்புறம் …

அதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு?

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share