ரத்த சாட்சி : விமர்சனம்!

Published On:

| By Kavi

ஒரு படம் எப்படியிருக்கணும்கறதுக்கு ஆயிரம் உதாரணம் சொல்லலாம். அதே மாதிரி, ஒரு புரட்சிப் படம் எப்படியிருக்கணும்கறதுக்கும் கூட உதாரணம் உண்டு. பொதுவுடைமை இயக்கத்தை பத்தி, அதன் தலைவர்கள், அவர்களோட செயல்பாடுகள் பத்தி பேச ஆரம்பிச்சா, அதுவே பல திரைக்கதைகளுக்கு சமமா இருக்கும்.

ஆனா மலையாளத்துலயும் பெங்காலி மொழியிலயும் இருக்கற அளவுக்கு தமிழ்ல பொதுவுடைமை பேசுற, அது முன்வைக்கும் புரட்சியை பேசுற படங்கள் ரொம்பவும் குறைவு. ஏனென்றால், தமிழ்நாட்டுல பொதுவுடைமை இயக்கங்கள், கட்சிகளை விட திராவிட இயக்கம் பலமாக வேரூன்றி நின்றதுதான்..

ADVERTISEMENT

அதுக்காக, தமிழ்ல புரட்சி பேசுற படங்களே இல்லையான்னு கேட்டுடக் கூடாது. 1960ல வெளியான ‘பாதை தெரியுது பார்’ படத்துல தொடங்கி இப்போ வரைக்கும் அப்பப்போ ஒண்ணு ரெண்டு படங்கள் அதைப் பேசத்தான் செய்யுது. அதுல ஒரு படமாக அடையாளம் காணப்படுவதுதான் ஜெயமோகன் கதை வசனத்தில், புதுமுக இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில், ஆஹா ஓடிடியில் வெளியாகியிருக்கிற ‘ரத்த சாட்சி’ திரைப்படம்.

படம் எப்படி இருக்கு?

ADVERTISEMENT

தர்மபுரி வட்டாரத்துல நடக்கற கதை இது.

ஆரம்பக் காட்சியில, வயல்ல சில பேரு வேலை பார்க்குறாங்க. பக்கத்துல இருக்கற கரும்பு தோட்டத்துல ஒரு தொழிலாளி சுருண்டு படுத்து கிடக்காரு. அவரை இழுத்துட்டு வந்து அடிக்குறாங்க சூப்பர்வைசருங்க.

ADVERTISEMENT

அடுத்த காட்சியில அவரு கரும்புச்சாறை ஒரு அண்டாவுல நிரப்பி வெல்லப்பாகா காய்ச்சிட்டு இருக்காரு. அவரு பொண்டாட்டி ஒரு தூக்குச்சட்டிய தூக்கிட்டு வர்றாங்க. கொஞ்சம் பாகு கொடுன்னு கேட்குறாங்க. அவர் தர முடியாதுங்கறாரு.

கொஞ்ச நேரத்துல அவர் அங்க இருந்து போனவுடனே, அந்தம்மா வெல்லப்பாகை எடுத்து சட்டியில ஊத்துறாங்க. அதை மறைச்சு வைக்க போகுறப்போ முதலாளி பார்த்துடறார். அப்புறமென்ன.. அவங்களை எட்டி உதைச்சு வெல்லப்பாகு காய்ச்சுற சட்டிக்குள்ள தள்ளி விடுறாரு..

அதுக்கப்புறம் அங்கிருக்கறவங்க எல்லாரும் அழுறாங்க.. போலீஸ்காரங்க வந்து பணத்தை வாங்கிட்டு எஃப்ஐஆர் பதிவு பண்ணாம போயிடுறாங்க..

இந்த காட்சிய கேட்குறப்பவே 80ஸ்ல வந்த படம் பார்த்த மாதிரி இருக்குல்ல.. அதுக்கேத்த மாதிரி படத்துலயும் 1980கள்ல நடக்குற கதைன்னு கார்டு போடுறாங்க.

இந்த ஒரு காட்சியே போதும்; படம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்க முடியும்.

வர்க்க போராட்டத்துல குதிக்குற ஒரு நக்சல்பாரி அமைப்பைச் சேர்ந்த இளைஞன், தலைமறைவாக இருக்கறதுக்காக ஒரு கிராமத்திற்கு போறான். போன இடத்துல, அங்க இருக்குற கொடுமைகளை தட்டிக் கேட்குறான். அதுக்கு பழி வாங்குற விதமா, அவரோட நண்பனை கைது பண்ணி கூட்டிட்டு போறாங்க போலீஸ் ஸ்டேஷன்ல அவர் இறந்து போறார்.

அந்த லாக்கப் டெத்துக்கு பழி வாங்க புறப்படறார் ஹீரோ. அதனால அவர் தேடப்படுற குற்றவாளியா மாறுரார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டுல நக்சல் அமைப்பை சேர்ந்தவங்க கூண்டோட கைது செய்யப்பட்டு கொல்லப்படுறாங்க.

அதுக்கப்புறம் ஹீரோ என்ன செய்றார்ங்கறதுதான் கதை.

Ratha Saatchi Movie Review

இந்த படம் ஆஹா ஓடிடியில வெளியாகியிருக்கு. தியேட்டர்ல ரிலீஸ் ஆகலைங்கற காரணத்தாலேயே, இதுல சில வன்முறை அதிகமுள்ள காட்சிகளும் இருக்கு.

’கைதி’ படத்துல நரேன் டீம்ல அண்டர்கவர் போலீஸா வருவாரே கண்ணா ரவி.. அவர்தான் இதுல நாயகன். நல்லாவே நடிச்சிருக்கார். தலைமுடியவும் தாடியவும் நீளமா வளர்த்துட்டு படத்துக்காகவே தன்னை அர்ப்பணிச்சிருக்கார். சில காட்சிகள்ல நமக்கு விஜய் சேதுபதிய பார்க்குற எபெக்டை உண்டு பண்ணியிருக்கார்.

ஆனால், கண்ணா ரவியைத் தாண்டி மத்த பாத்திரங்கள் ஏதும் பெரிசா மனசுல பதியலை. இத்தனைக்கும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குமரவேல், மெட்ராஸ் பட வில்லன் சார்லஸ் வினோத், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், ஆறுமுகம் பாலான்னு தெரிஞ்ச முகங்கள் கொஞ்ச பேர் இருக்காங்க.

நிஜக்கதைன்னு பீல் வர்றமாதிரி, ஒரு காட்சியில எம்ஜிஆர் மாதிரி ஓஏகே சுந்தர் வந்து போறார். இது போக நக்சல்பாரி இயக்கத் தலைவர்களா, தோழர்களா சில பேர் வந்து போறாங்க. சாதாரண ஊர் மக்களா, கண்ணா ரவியோட சொந்தக்காரங்களா பல முகங்கள் திரையில தெரியுது. அவங்க பாத்திரம் எதுவுமே நம்ம மனசுல பதியலை. அது இந்த படத்தோட மிகப்பெரிய மைனஸ்.

ஆனா, யாரோட நடிப்பும் நமக்கு செயற்கையா தெரியலை. அது நிச்சயம் ப்ளஸ்தான்..

குறைந்த பட்ஜெட்ங்கறதால, முடிஞ்சவரைக்கும் ரியல் லொகேஷன்ல ஷூட் பண்ணியிருக்காங்க.. ஒளிப்பதிவாளர் ஜகதீஷ் ரவியோட கடின உழைப்பு திரையில தெரியுது. டிஐ தனியா தெரியாத அளவுக்கு, அவரோட திறமை வெளிப்பட்டிருக்கு.

அதேமாதிரி, எடிட்டர் பிரகாஷ் கருணாநிதி ஒவ்வொரு காட்சியவும் ரொம்ப நேர்த்தியா செதுக்கியிருக்கார். அப்படியிருந்தும் படம் போரடிக்கற மாதிரி தோணுறதுக்கு திரைக்கதையாக்கம் தான் காரணம்.

ஜெயமோகனோட ‘கைதிகள்’ சிறுகதைதான் களம். அதுக்கேத்த மாதிரி ரொம்ப எளிமையா காட்சிகளை அமைச்சிருக்கார் இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில். ஆனாலும், அந்த காட்சிகள் பழைய படங்களை பார்த்த உணர்வைத்தான் தருகிறது. அங்கங்க சில இடங்கள்ல வசனம் நம் கவனத்தை ஈர்க்குது. முக்கியமா, ஆறுமுகம் பாலா பேசுற தொனி அப்படியே திருநெல்வேலி வட்டாரத்தை சேர்ந்த ஒரு நபரா அவரோட பாத்திரத்தை வெளிக்காட்டுது.

ஆனா, திரைக்கதையோ தர்மபுரியில நடக்குற மாதிரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கு. இதுக்கு இயக்குனர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் திரைக்கதையில இருக்கு.. அப்படி இல்லாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

மியூசிக் டைரக்டர் ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை நல்லாயிருக்கு. குறிப்பா ஆக்‌ஷன் காட்சிகள்ல நல்லா படத்தோட ஒன்றிப்போக வைக்குறார். அதுக்கடுத்து வர்ற சீரியசான காட்சியில அந்த ‘டெம்போ’ போயிடுது. அதை கவனிச்சிருக்கலாம்.

கலை இயக்குனர் எழில் சின்னச் சின்ன விஷயங்கள் வழியாவே இது 1980கள்ல நடக்குற கதைன்னு உணர்த்தியிருக்கிறார். பாராட்டுகள்!

பார்க்கலாமா வேண்டாமா?

ஓடிடியில வர்ற படங்கள்னாலே சீரியசாக தான் இருக்கும் அப்படின்னு ஒரு எண்ணம் இருக்கு; சில படங்களைப் பார்த்தபிறகு, அதுல வர்ற படங்கள் பார்க்க முடியாத படங்களாகவும் இருக்கும்னு ஒரு பார்வை வளர்ந்திருக்கு.

அந்த வகையில ‘ரத்தசாட்சி’ எப்படிப்பட்ட படம்? பார்க்கலாமா வேண்டாமான்னு கேட்டா ‘உங்க இஷ்டம்’னுதான் சொல்ல வேண்டியிருக்கு. ஏன்னா, ‘கண்டிப்பா பார்த்தாகணும்’னு சொல்ற அளவுக்கு படம் இல்ல.

அதே மாதிரி ‘நக்சல்பாரி’ இயக்கம் பத்தியோ, பொதுவுடைமை கருத்துகள் பத்தியோ தெரிஞ்சுக்கவும் சிலாகிக்கவும் இந்த படம் எடுக்கப்படலை.

சில வருஷங்களுக்கு முன்னால சிவகார்த்திகேயனோட ‘வேலைக்காரன்’ படம் வெளியானது. அதுல, இப்போ இருக்குற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி ஒரு சாதாரண மனிதன் என்னென்ன வழிகளில் கம்யூனிச சித்தாந்தத்தை கையில எடுக்கலாம்னு காட்டப்பட்டிருக்கும். அது கொஞ்சம் யதார்த்தமாகவும் இருக்கும்.

ஆனா, ‘ரத்த சாட்சி’ படம் 80கள்ல வந்த ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படங்களையொட்டித்தான் இருக்குது. பழைய படங்கள்ல கோர்ட்னு ஒரு செட்டை காட்டி, ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ன்னு கேஸ் கட்டோட ஜட்ஜ் முன்னாடி டயலாக் பேசுவாங்களே.. அதுமாதிரிதான் இதுல தர்மபுரியில நடந்த வர்க்க போராட்டம் கையாளப்பட்டிருக்கு.

அதை ஒரு கதையா ரசிக்க நினைச்சா தாராளமா ‘ரத்தசாட்சி’ பார்க்கலாம். இல்ல, ரத்தமும் சதையுமா ஒரு யதார்த்தமான படைப்பை பார்த்து என்னோட ஆன்மாவை இளக வைக்குற ஒரு அனுபவத்துக்கு தயாராகப் போறேன்னு சபதம் எடுத்திருந்தீங்கன்னா, கண்டிப்பா இதைப் பார்க்க வேணாம்..

மத்தபடி குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படத்தை நேர்த்தியா எடுத்திட முடியும்னு நம்பிக்கை தர்ற விதமா ‘ரத்த சாட்சி’ அமைஞ்சிருக்குது. அது மட்டும்தான் படம் பார்த்து முடிஞ்சபிறகு நம்ம மனசுல நம்பிக்கையளிக்கிற விஷயமாகவும் இருக்குது.

உதய் பாடகலிங்கம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன: நீரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுவார்!  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share