டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா இன்று (அக்டோபர் 11) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று (அக்டோபர் 10) மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா செயல்பட்டு வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் புதிய தலைவராக நோயல் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரத்தன் டாடாவின் தந்தை நேவல் டாடாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சூனூவிற்கு ரத்தன் டாடா, ஜிம்மி டாடா என்று இரண்டு மகன்கள்.
இரண்டாவது மனைவியான சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சிமோனுக்கு பிறந்தவர் தான் தற்போது அறக்கட்டளையின் தலைவராகியுள்ள நோயல் டாடா. இவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் டாடா குழுமத்தில் இணைந்து அக்குழுமத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக நோயல் டாடா இருந்து வந்தார். தற்போது அவர் டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் வாட்ச் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
126 ஆண்டுகள் பழமையானது… எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் ரயில் நிலையம் அகற்றம்!
காவல்நிலையத்தில் கலைஞருக்கு என்ன நேர்ந்தது? : முரசொலி செல்வத்தின் எழுத்தை பகிர்ந்த அருள்மொழி